Published : 24 Jul 2022 07:04 AM
Last Updated : 24 Jul 2022 07:04 AM

கங்காரு நீதிமன்றம் நடத்தும் சமூக ஊடகங்கள் - பொறுப்புடன் செயல்பட தலைமை நீதிபதி அறிவுரை

புதுடெல்லி: கங்காரு நீதிமன்றம் நடத்தும் சமூக ஊடகங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அறிவுறுத்தியுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்த கல்வி நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி. ரமணா பேசியதாவது:

புதிய ஊடகங்களுக்கு தகவல்களை பரப்பும் திறன் அதிகம் உள்ளது. ஆனால், அவற்றுக்கு நல்லது எது, தீயது எது என அடையாளம் காணத் தெரியாமல் இருப்பது போல் தோன்றுகிறது. அனுபவம் மிக்க நீதிபதிகளால் கூட தீர்வை கண்டறிய சிரமப்படும் விஷயங்கள் குறித்து ஊடகங்கள் சில நேரங்களில் விவாத நிகழ்ச்சிகள் மூலம் கட்டபஞ்சாயத்து (கங்காரு நீதிமன்றம்) நடத்துவதை நாம் பார்க்கிறோம். பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் ஊடக விவாதங்கள் வழிகாட்டியாக இருக்க முடியாது. நீதி வழங்க வேண்டிய விஷயங்களில், தவறான தகவல்கள், கொள்கைகளுடன் கூடிய விவாதங்கள், ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு கேடு விளைவிப்பதாக இருக்கின்றன. ஊடகம் மூலம் பரப்பப்படும் பாரபட்சத்துடன் கூடிய தகவல்கள் ஜனநாயகத்தை பலவீனமாக்குகின்றன

ஊடகங்கள் தங்கள் பொறுப்பை மீறுவதன் மூலம், நமது ஜனநாயகம் 2 அடி பின்னோக்கி செல்கிறது. அச்சு ஊடகங்கள் பொறுப்புடன் நடந்து கொள்கின்றன. ஆனால், எலக்ட்ரானிக் ஊடகங்களுக்கு சுத்தமாக பொறுப்பே இல்லை. சமூக ஊடகங்கள் இன்னும் மோசம். அவை நீதிபதிகளுக்கு எதிரான பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளன. இதற்கு நீதிபதிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் இருக்கலாம். இதை தயவுசெய்து பலவீனமாக கருதக் கூடாது.

பதவியில் இருக்கும்போது குற்றவாளிகள் பலரை சிறைக்கு அனுப்பும் நீதிபதி, ஓய்வு பெற்றபின், எந்த பாதுகாப்பும் இல்லாமல், தண்டிக்கப்பட்டவர்கள் இருக்கும் சமூகத்தில் சேர்ந்து வாழ வேண்டிய நிலை உள்ளது. ஊடகங்கள் சுயஒழுங்குமுறையுடனும், கட்டுப்பாட்டுடனும் செயல்பட வேண்டும். எலக்ட்ரானிக் மற்றும் சமூக ஊடகங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

வழக்குகளுக்கு முன்னுரிமை அளிக்கும் விவகாரம் நீதித்துறையில் மிகப் பெரிய சவாலாக உள்ளது. சமூக முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை நீதிபதிகளால் கண்டுகொள்ளாமல் இருக்கமுடியாது. பிரச்சினைகள் மற்றும் சுமைகளில் இருந்து சமூக அமைப்பை காக்க, முக்கியமான விஷயங்களுக்கு நீதிபதி முன்னுரிமை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x