Published : 24 Jul 2022 05:56 AM
Last Updated : 24 Jul 2022 05:56 AM
புதுடெல்லி: ஆகஸ்ட் 14-ம் தேதி முதல் தூர்தர்ஷன் தொலைக்காட்சி புதுப்பொலிவு பெறுகிறது. இதில் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் மறைக்கப்பட்ட வரலாறு உள்ளிட்டபல புதிய தொடர்கள் வெளியாகின்றன.
ஆகஸ்ட் 15-ம் தேதி நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாட மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக ஓராண்டுக்கு முன்பே, ‘ஆஸாதி கா அம்ரித் மஹோத்சவ்’ என்ற பெயரில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.
தற்போது மத்திய அரசின் தூர்தர்ஷன் தொலைக்காட்சியும் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்கிறது. டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் புதுப்பொலிவுடன் பல புதிய தொடர்களை ஒளிபரப்ப தூர்தர்ஷன் திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக, கடந்த 1498 முதல் 1947-ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் மறைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வரலாற்றை தொடராக வெளியிட உள்ளது. மொத்தம் 75 வாரங்கள் வெளியாகும் தொடருக்கு ‘ஸ்வராஜ்- பாரத் கே ஸ்வதந்திரத்தா சங்ராம் கீ சமகிரஹா கதா (சுயராஜ்யம் -இந்திய சுதந்திர போராட்டத்தின் முழு கதை) என்று இந்த தொடருக்கு பெயரிடப்பட்டுள்ளது.
இதற்கான முன்னறிவிப்பை மத்திய விளையாட்டு மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் டெல்லியில் வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில், அனுராக் சிங் தாக்குர் பேசுகையில், ‘‘இந்தமுன்னோட்டம் தூர்தர்ஷனுக்கானது மட்டும் அல்ல, புதிய இந்தியாவின் புதிய தூர்தர்ஷனுக்கானதும் ஆகும். சித்ரஹார் (ஒலியும் ஒளியும்) முதல் சமாச்சார் (செய்தி) வரை தூர்தர்ஷனில் ஒரு தரம் இருக்கும். இது, வரும் காலங்களில் மேலும் பொலிவு பெறும்.
கோவிட் 19 பரவல் காலத்திலும் இந்த ஸ்வராஜ் தொடருக்கான குழுவினர் தொடர்ந்து ஆய்வு செய்து வந்தது பாராட்டத்தக்கது. பத்து மொழிகளில் வெளியாகும் இந்த தொடர் அகில இந்திய வானொலியிலும் ஒலி வடிவில் ஒலிபரப்பாகிறது’’ என்று தெரிவித்தார்.
தமிழிலும் வெளியாக உள்ள புதிய வரலாற்றுத் தொடரில் தமிழகத்தில் மறைக்கப்பட்ட சில முக்கிய சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாறும் இடம் பெற உள்ளது. அதேசமயம், இந்த தொடரின் மீது இடதுசாரி சிந்தனையாளர்களிடம் இருந்து சில வரலாற்று சர்ச்சைகளும் எழும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் 14-ம் தேதிக்கு பின் தூர்தர்ஷனும் தனியார் தொலைக்காட்சிகளுக்கு போட்டியாக இருக்கும் என்று மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சகம் எதிர்பார்க்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT