Published : 23 Jul 2022 05:07 PM
Last Updated : 23 Jul 2022 05:07 PM
புதுடெல்லி: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மகள் கோவாவில் சட்டவிரோதமாக மதுபான விடுதியை நடத்துகிறார் என்றும், ஆகையால் அமைச்சரை பிரதமர் மோடி பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸார் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
ஆனால், இதனை ஸ்மிருதி இரானியின் மகள் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக ஸ்மிருதியின் மகள் கீரத் நக்ராவின் வழக்கறிஞர் பேசுகையில், “கோவாவில் உள்ள சில்லி சோல்ஸ் கோவா மதுபான விடுதிக்கு கீரத் நக்ரா உரிமையாளர் இல்லை. அவர் அதை எடுத்து நடத்தவும் இல்லை. அவர் மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை” என்று கூறுகிறார்.
கீரத் நக்ரா கூறுகையில், “என் மீது தவறான, போலியான, அவதூறான கருத்துகளை சமூக ஊடகங்களில் சிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் பேரில் பகிர்கின்றனர்” என்று கூறியிருக்கிறார்.
காங்கிரஸின் குற்றச்சாட்டுகளை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியும் திட்டவட்டமாக மறுத்துள்ளார். 2024-ல் தனக்கு எதிராக அமேதியில் மீண்டும் போட்டியிட்டால் ராகுல் தோற்பது உறுதி என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.
ஆனால் காங்கிரஸ் தரப்போ “சில்லி சோல்ஸ் விடுதிக்கு விதிமீறல் தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீஸ் அனுப்பிய அதிகாரி மேலிட அழுத்தம் காரணமாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். சில்லி சோல்ஸ் உணவு விடுதியில் சட்டவிரோதமாக மதுபான விடுதி உள்ளது. அதற்கான லைசன்ஸ் 2021-ல் இறந்துபோன நபரில் பெறப்பட்டிருக்கிறது. ஆனால், லைசன்ஸ் பெறப்பட்டதோ ஜூன் 2022-ல் தான்.
13 மாதங்களுக்கு முன்னரே இறந்த நபரின் பெயரில் எப்படி உரிமம் பெற முடியும்? கோவாவில் எல்லா உணவகங்களுக்குமே ஒரே ஒரு மதுபான விடுதிக்குதான் உரிமம் இருக்கும். சில்லி சோல்ஸ் உணவகத்தில் மட்டும்தான் இரண்டு பார்களுக்கான உரிமம் இருக்கிறது. இவையெல்லாம் மேலிட அழுத்தம் இல்லாமல் நடந்துவிடுமா?
இந்த உணவகத்தை சுற்றி பவுன்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஊடக வெளிச்சம் இந்த விடுதியின் மீது படாமல் இருக்கவே இந்த கெடுபிடி” என்று கூறியுள்ளார் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா.
“இந்த விவாகரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு இளைய தலைமுறையினர் நலனைக் காக்க சட்டவிரோத பார் நடத்தும் ஸ்மிருதி இரானியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
மேலும், “ராகுல் காந்தியை அமலாக்கத்துறை செய்தித்தாள் நடத்தியதற்காக விசாரிக்கிறது. ஆனால், இங்கே ஆளும் கட்சி அமைச்சர் மதுபான விடுதி... அதுவும் சட்டவிரோதமாக நடத்துகிறார்” என்று ஸ்மிருதி இரானியை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT