Published : 23 Jul 2022 04:39 PM
Last Updated : 23 Jul 2022 04:39 PM

அக்னிபத் எதிர்ப்பு போராட்டத்தால் ரயில்வேக்கு ரூ.259.44 கோடி இழப்பு: மத்திய அரசு தகவல்

கோப்புப் படம்

புதுடெல்லி: "அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டங்களால் ரயில்வே சொத்துக்கள் சேதம் மற்றும் அழிவு காரணமாக ரூ.259.44 கோடி இழப்பு ஏற்பட்டது” என்று ரயில்வே, தகவல் தொடர்பு மற்றும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில், மாநிலங்களவையில் மதிமுக பொதுச் செயலாளரும், எம்பியுமான வைகோ, "அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் மற்றும் போராட்டக்காரர்களால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டதா? அப்படியானால், அதன் விவரங்கள், மாநில வாரியாக வேண்டும்.

மேற்கண்ட போராட்டத்தின் காரணமாக எத்தனை ரயில்கள் ரத்து செய்யப்பட்டன? மற்றும் எந்த காலத்திற்கு ரத்து செய்யப்பட்டன? ரயில்களை ரத்து செய்ததாலும், திருப்பி விட்டதாலும் ரயில்வேக்கு ஏற்பட்ட இழப்பு, பயணிக்கும் பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்பைத் தவிர அனைத்து ரயில் சேவைகளும் சீரமைக்கப்பட்டுவிட்டதா? அப்படியானால், அதன் விவரங்கள் என்ன?” என்பது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பினார்.

இதற்கு ரயில்வே, தகவல் தொடர்பு மற்றும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அளித்த பதில்: "அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் காரணமாக 62 இடங்களில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. 15.06.2022 முதல் 23.06.2022 வரை மொத்தம் 2132 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

அக்னிபத் அறிவிக்கப்பட்ட பிறகு நடத்தப்பட்ட போராட்டங்களின் விளைவாக ரயில் சேவைகள் சீர்குலைந்ததால் பயணிகள் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான தனித் தரவு பராமரிக்கப்படவில்லை. இருப்பினும், 14.06.2022 முதல் 30.06.2022 வரையிலான காலகட்டத்தில், ரயில்கள் ரத்து செய்யப்பட்டதன் காரணமாக தோராயமாக 102.96 கோடி திருப்பி வழங்கப்பட்டது.

அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டங்களால் ரயில்வே சொத்துக்கள் சேதம் மற்றும் அழிவு காரணமாக 259.44 கோடி இழப்பு ஏற்பட்டது. அக்னிபத் போராட்டத்தின் காரணமாக ரத்து செய்யப்பட்ட அனைத்து ரயில் சேவைகளும் தற்போது இயங்குகின்றன" என்று அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x