Published : 23 Jul 2022 12:53 AM
Last Updated : 23 Jul 2022 12:53 AM
அசாகாவோ: கோவாவில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குடும்பத்துக்கு சொந்தமான உணவகம் மோசடியில் சிக்கியுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
கோவா மாநிலம் அசாகாவோ பகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குடும்பத்தினர் நடத்திவருவதாக சொல்லப்படும் உணவகம் சில்லி சோல்ஸ் கஃபே மற்றும் பார். இதனை ஸ்மிருதியின் மகள் ஜோயிஷ் இரானி நிர்வகித்துவருகிறார். இந்த உணவகம் சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளது. இறந்தவரின் பெயரை பயன்படுத்தி உணவகத்துக்கு மதுபான உரிமை பெற்றதாக சொல்லப்படுகிறது.
கோவா மாநில கலால் விதிகளின்படி, ஏற்கனவே உள்ள உணவகம் மட்டுமே மதுபானம் அல்லது பார் உரிமம் பெற முடியும். ஆனால் புதிதாக தொடங்கப்பட்ட சில்லி சோல்ஸ் கஃபே இன்னும் உணவக உரிமமே பெறவில்லை. அதற்குள் பார் நடத்தப்படுகிறது. உணவகத்தின் மதுபான உரிமம் அந்தோனி டிகாமா என்பவரின் பெயரில் உள்ளது. மேலும் இது கடந்த மாதமே புதுப்பிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால், உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அந்தோனி டிகாமா என்ற நபர் 2021 மே மாதமே உயிரிழந்துவிட்டார். இந்த அந்தோனி டிகாமா மும்பையின் வைல் பார்லேயில் வசிப்பவர். மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் இவர் இறந்ததை உறுதிப்படுத்தி அதற்கான இறப்பு சான்றிதழையும் வழங்கியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் ரோட்ரிக்ஸ் என்பவர், ஆர்டிஐ விண்ணப்பம் மூலம் இந்த மோசடியை வெளிப்படுத்தியுள்ளார். மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குடும்பத்தினர் கலால்துறை அதிகாரிகள் மற்றும் உள்ளூர் பஞ்சாயத்துடன் இணைந்து நடத்திய மெகா மோசடி குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வழக்கறிஞர் ரோட்ரிக்ஸ் கோரிக்கைவிடுத்து வழக்கு பதிவு செய்துள்ளார். வழக்கு விசாரணை வரும் ஜூலை 29ம் தேதி நடைபெறவுள்ளது.
வழக்கறிஞர் ரோட்ரிக்ஸால் இந்த சர்ச்சை வெளிவந்துள்ள நிலையில், உணவகத்துக்கு கோவா அரசின் கலால்துறை ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT