Published : 22 Jul 2022 06:16 PM
Last Updated : 22 Jul 2022 06:16 PM
புதுடெல்லி: பெண்களுக்கான ‘மெனோபாஸ்’ எனப்படும் மாதவிடாய் நிறுத்தம் கொள்கை தற்போது மத்திய அரசிடம் இல்லை. இந்த தகவலை இன்று திமுகவின் டி.ரவிக்குமார் எம்.பி எழுப்பிய கேள்விக்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பதிலாக அளித்துள்ளார்.
இது குறித்து விழுப்புரம் தொகுதி எம்பியான டி.ரவிகுமார் எழுப்பியக் கேள்வியில், ‘அரசு மற்றும் தனியார் துறையில் மெனோபாஸ் (மாதவிடாய் நிறுத்தம்) கொள்கையை அறிமுகப்படுத்தும் திட்டம் அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளதா? அடுத்த வருடத்திற்குள் அத்தகைய கொள்கையை அமைச்சகம் வெளியிடப் போகிறதா? அப்படியானால், அதன் விவரங்களைத் தருக. இல்லையெனில், அந்த கொள்கையானது எதிர்காலத்தில் எப்போது அறிமுகப்படுத்தப்படும்?
மெனோபாஸ் போன்ற பெண்களின் உடல்நலம் தொடர்பான பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் தற்போது செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகள் என்ன?’ எனக் கேட்டிருந்தார்
இக்கேள்விகளுக்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அளித்த பதில்: "மெனோபாஸ் (மாதவிடாய் நிறுத்தம்) என்பது பெண்களுக்குப் பொதுவாக 45 முதல் 55 வயதிற்குள் நடக்கும் செயல்முறையின் இயல்பான விளைவாகும். எந்த அடிப்படை காரணமும் இல்லாமல் ஒரு வருடத்திற்கு மாதவிடாய் ஏற்படாமல் இருந்தால் பெண்களுக்கு பொதுவாக மாதவிடாய் நின்றதாகக் கருதப்படுகிறது.
சில பெண்களுக்கு லேசான பிரச்சினைகள் இருக்கும், சிலருக்கு பிரச்சனை எதுவும் இருக்காது. ஆனால் சில பெண்களுக்கு இந்த காலகட்டத்தில் கடுமையான அறிகுறிகள் இருக்கும். மாதவிடாய் நின்ற பிற்பகுதியில் பல ஆண்டுகளைக் கழிக்கும் பெண்களின் வாழ்வில் இது தவிர்க்க முடியாத நிகழ்வு.
தேசிய சுகாதார இயக்கமானது (NHM) மெனோபாஸ் பிரச்சினை உட்பட மக்களின் தேவைகளை நிறைவு செய்கிற அனைவருக்கும் சமமான, மலிவு மற்றும் தரமான சுகாதார சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.
தற்போது அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு மெனோபாஸ் கொள்கை எதுவும் நடைமுறையில் இல்லை. மெனோபாஸ் கொள்கையை உருவாக்குவதற்கு முன்பு அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் பெண்கள் மெனோபாஸ் காலத்தில் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் எதிர்கொள்ளும் சிக்கல்கள் தொடர்பான ஆழமான ஆய்வுகள் தேவைப்படுகின்றன. அத்துடன் சம்பந்தப்பட்டவர்கள், நிபுணர்கள் முதலானவர்களுடன் கலந்தாலோசித்து, இந்த விஷயத்தின் அனைத்து அம்சங்களையும் கவனமாகப் பரிசீலிக்க வேண்டிய அவசியம் உள்ளது.
மேலும், மெனோபாஸ் உள்ளிட்ட பெண்களின் சுகாதாரப் பிரச்சனைகள் தொடர்பாக இந்திய ஒன்றிய அரசின் பல்வேறு திட்டங்கள் மூலமாகவும், விளம்பரங்கள் அல்லது நாடகம் போன்றவற்றின் மூலமாகவும் பெண்களிடையே விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது" இவ்வாறு தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT