Published : 22 Jul 2022 06:10 AM
Last Updated : 22 Jul 2022 06:10 AM
இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு தேர்வாகியுள்ளார். நாட்டின் முதல் பழங்குடியின பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையுடன் அவர் பதவியேற்க உள்ளார். இது பிரதமர் மோடியின் ராஜதந்திர நடவடிக்கைகளுக்கு கிடைத்த முதல் வெற்றியாக கருதப்படுகிறது.
குடியரசுத் தலைவர் பதவிக்கு திரவுபதி முர்மு மற்றும் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு ஜெகதீப் தன்கர் என முடிவு செய்ததே பிரதமர் மோடியின் மிகப்பெரிய அரசியல் நகர்வாக கருதப்படுகிறது. இந்தியாவில் குடியரசுத் தலைவர் பதவி அலங்கார பதவி, ரப்பர் ஸ்டாம்ப் போன்ற விமர்சனங்கள் இருந்தாலும், வி.வி.கிரியைத் தொடர்ந்து இப்பதவியில் இருந்த அனைவரும் நேருகுடும்பத்துக்கு விசுவாசமானவர்களா என்று பார்க்கப்பட்டு அந்த தகுதியின் அடிப்படையிலேயே அப்பதவிகளுக்கு வந்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் தன்னிச்சையாக சட்டத்தை மீறி செயல்பட முடியாதபடி பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் வகுத்துள்ளனர். அரசியல் அமைப்பில் பெரிய அளவில் சர்ச்சைகள் ஏற்படும் போது, மத்திய அரசில்திடீர் மாற்றங்கள் வரும் போது மட்டுமே குடியரசுத் தலைவர் தனது அதிகாரத்தை ஓரளவுக்கு பயன்படுத்தும் நிலை உள்ளது. நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளுக்கு மேல் நடந்து வரும் ஜனநாயக ஆட்சியில் குடியரசுத் தலைவர் தனது அதிகாரத்தை பயன்படுத்திய சம்பவங்கள் மிகவும் சொற்பமானவையே. குடியரசுத் தலைவருக்கும் பிரதமர் அலுவலகத்துக்கும் இடையே சர்ச்சைகள் எழுந்த சம்பவங்கள் மிக அரிதானவை.
இதுவரை இந்தியாவில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 4 பேர், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இருவர், ஒரு பெண் ஆகியோர் குடியரசுத் தலைவர் பதவியை அலங்கரித்துள்ளனர். அவர்கள் பெரும்பாலும் மற்ற தகுதிகளைக் காட்டிலும் நேரு குடும்பத்தின் தீவிர ஆதரவாளர்களா என்று மட்டுமே பார்க்கப்பட்டு அப்பதவிக்கு கொண்டு வரப்பட்டனர். நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் இரவு தூங்கிக் கொண்டிருந்த பக்ருதீன் அலியை எழுப்பி நள்ளிரவில் கையெழுத்து பெற்றது, 1984-ல்இந்திரா காந்தி சுடப்பட்டபோது அவசர அவசரமாக கியானி ஜெயில் சிங் மூலம் ராஜீவ் காந்தியை பிரதமராக பதவியேற்க செய்தது போன்ற சம்பவங்கள் இதற்கான சாட்சிகள்.
வாஜ்பாய் பிரதமராக இருந்த கால கட்டத்தில் வேறு தகுதியின் அடிப்படையில் அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக வந்தார். அதன் பிறகு மீண்டும் பிரதிபா பாட்டீல் 12-வது குடியரசுத் தலைவரானபோது காங்கிரஸின் தகுதி வரையறை மீண்டும் அமலுக்கு வந்தது. இந்திரா மறைவுக்குப் பிறகு பட்டும் படாமல் இருந்த பிரணாப் முகர்ஜி, காங்கிரஸின் குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்வாக இல்லை. 2014-ம் ஆண்டு தேர்தலில் தொங்கு பார்லிமென்ட் அமையும் என்று காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்ததால் தங்களுக்கு ஆதரவான ஒருவர் வர வேண்டும் என்று கருதினர். ஆனால், திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் பிரணாப் முகர்ஜி 13-வது குடியரசுத் தலைவரானார்.
எதிர்பார்ப்புக்கு மாறாக பாஜக கூட்டணி 2014 தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபின், பிரதமர் மோடியுடன் பிரணாப் முகர்ஜி நெருக்கமாகி விட்டார். அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கும் அளவுக்கு அவர்களது நெருக்கம் அதிகமானது. இந்த நெருக்கத்தை காங்கிரஸ் தலைமை விரும்பவில்லை. பின்னர் மோடி ஆட்சியில் காங்கிரஸின் வழக்கமான தகுதி வரையறை முற்றிலுமாக மாறியது. எதிலும் மாற்றத்தை எதிர்பார்க்கும் மோடி அரசு, குடியரசுத் தலைவர் பொறுப்புக்கு தலைவரை தேர்வு செய்வதிலும் மாற்றத்தை கொண்டு வந்தது. ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவராகவும், வெங்கய்ய நாயுடு குடியரசு துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த முறை திரவுபதி முர்முவை குடியரசுத் தலைவராக ஆக்கியதும், தன்கரை குடியரசு துணைத் தலைவராக கொண்டு வரும் நடவடிக்கையும் இந்திய அரசியலில் மோடியின் அடுத்த பாய்ச்சல் என்று விமர்சகர்கள் கணிக்கின்றனர். பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் குடியரசுத் தலைவராக வருவது, நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 9 சதவீதம் உள்ள பழங்குடியின மக்களிடம் பாஜக-வை கொண்டு சேர்த்து பெருமளவில் வாக்குகளை பெற்றுத் தரும் நடவடிக்கை என்று கணிக்கப்படுகிறது. ‘புறக்கணிக்கப்பட்ட சமூகத்தை உள்ளடக்கிய அரசு இந்தியா’ என்ற பெயரை உலகளவில் கொண்டு சேர்க்க முர்முவின் பதவிக் காலம் உதவும் என்றும் கருதப்படுகிறது.
ஜெகதீப் தன்கரைப் பொறுத்தமட்டில், மோடி வேறு அரசியல் அணுகுமுறையை பின்பற்றியுள்ளார். மோடி அரசு எஞ்சியுள்ள 2 ஆண்டுகளில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. மோடி 3.0 என்று வர்ணிக்கப்படும் இந்த காலக் கட்டத்தில் பெரும்பான்மை இல்லாத மாநிலங்களவையை வழிநடத்த வலுவான தலைவர் ஒருவர் தேவை என்ற அடிப்படையில் தன்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாநிலங்களவையில் பாஜக கூட்டணிக்கு 113, காங்கிரஸ் கூட்டணி 50, எதிலும் சேராத கட்சிகள் 74 என்ற நிலை இருப்பதால் வரவிருக்கும் அதிரடி மாற்றங்களுக்கு வித்திடும் மசோதாக்களை நிறைவேற்ற வலுவான ஒருவர் தேவை என்ற வகையில் தன்கர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். வலுவான சட்டப் பின்னணி, மேற்கு வங்கத்தில் சவாலான ஆளும் கட்சியை சமாளித்த விதம் போன்ற அணுகுமுறைகள் அவரை குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக்கி உள்ளது.
மோடியின் அடுத்த நகர்வு, கட்சியையும் ஆட்சியையும் மென்மேலும் வலுப்படுத்துவதே. வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல்களில் பாஜக-வை வழிநடத்தப் போகும் அடுத்தகட்ட மூத்த தலைவர்கள் உருவாகும் வகையில் மோடியின் அரசியல் நகர்வுகள் இருக்கும் என்றும் கணிக்கப்படுகிறது. இன்னும் ஒரு சில மாதங்களில் கட்சியிலும் ஆட்சியிலும் மோடியின் பாய்ச்சல் பன்மடங்கு வீரியத்துடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT