Published : 21 Jul 2022 06:58 AM
Last Updated : 21 Jul 2022 06:58 AM
கடப்பா: வெளிமாநிலத்தில் இறந்த 3 பேரின் சடலங்களை ஊருக்குள் கொண்டு வந்தால் தொற்று நோய் பரவும் என ஊர் பெரியவர்கள் எச்சரித்ததால் அந்த சடலங்களை முறைப்படி தகனம் செய்யாமல் வெள்ளத்தில் வீசிய சம்பவம் ஆந்திர மாநிலத்தில் நடந்துள்ளது.
ஆந்திர மாநிலம், அன்னமய்யா மாவட்டம், ராயசோட்டி அருகே உள்ள கோர்லமதிவீடு கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்கள் அடுப்புக் கரி தொழில் செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இவர்களில் 13 பேர் கடந்த 15 நாட்களுக்கு முன் கர்நாடக மாநிலம், குல்பர்காவில் உள்ள அடுப்புக்கரி தயாரிக்கும் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றனர்.
அங்கு கிணற்று நீரை குடித்துவந்த அவர்களுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இவர்களுக்கு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து வீட்டுக்குச் செல்லுமாறு கூறிவிட்டனர்.
இதையடுத்து சொந்த ஊருக்குப் புறப்பட தயாரான அவர்களில் 17 வயதான ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சொந்த ஊருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதில் தொற்று நோய் ஏற்படலாம் என்பதால் அங்கேயே உடலை தகனம் செய்ய ஊர் பெரியவர்கள் ஆணையிட்டனர். இதையடுத்து இளம்பெண்ணின் சடலத்தை குல்பர்காவிலேயே தகனம் செய்து விட்டு எஞ்சிய 12 பேர் ஊருக்கு புறப்பட்டனர்.
இந்நிலையில் வரும் வழியில், செஞ்சய்யா (60), செஞ்சு ராமய்யா(25), பாரதி (25) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து மீண்டும் பேசிய ஊர் பெரியவர்கள், சடலங்களை ஊருக்குள் அனுமதிக்க மாட்டோம் என திட்டவட்டமாக கூறினர். இதனால் வேறு வழியின்றி 3 பேரின் சடலங்களை ஒரு பிளாஸ்டிக் பையில் சுற்றி, ஒரு பள்ளத்தாக்கில் பாய்ந்தோடும் வெள்ளத்தில் வீசி விட்டு ஊர் திரும்பினர்.
இந்த சடலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, கடப்பா - அன்னமய்யா மாவட்ட எல்லையில் ஒதுங்கின. தகவலின் பேரில் அப்பகுதி போலீஸார் சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு ஒரு சடலத்தின் சட்டை காலரில் உள்ள டெய்லரின் முகவரியை அடையாளம் கண்டுபோலீஸார் நடத்திய விசாரணையில் அனைத்து விஷயங்களும் வெளியில் வந்தன.
இதைத் தொடர்ந்து கடப்பா போலீஸார் வழக்கு பதிவு செய்து, சடலங்களை ஊருக்குள் கொண்டுவரக்கூடாது என உத்தரவிட்ட ஊர் பஞ்சாயத்தாரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT