Published : 21 Jul 2022 06:50 AM
Last Updated : 21 Jul 2022 06:50 AM
பெங்களூரு: கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள ஷிரூர் பகுதியில் நேற்று மாலை நல்ல மழை பெய்தது. அப்போது ஷிரூர்டோல்கேட் பிளாசாவில் அதிவேகமாக வந்த ஆம்புலன்ஸ் சாலையில்வழுக்கியபடி வந்து பூத் மீது மோதியது.
இதில் ஆம்புலன்ஸில் இருந்த கஜனன்னா, லோகேஷ், மஞ்சுநாத் மற்றும் ஜோதி ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து பைந்தூர் சப் இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத் கூறியதாவது: ஹொன்னாவரில் இருந்து உடுப்பி நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்புலன்ஸில் ஓட்டுநர் உட்ட 8 பேர் இருந்தனர்.
அதில் நோயாளி கஜனன்னா ஹொன்னாவரில் உள்ள ஸ்ரீதேவிமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உயர் சிகிச்சைக்காக உடுப்பி மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது.
கர்நாடகா முழுவதும் தொடர் மழை பெய்து கொண்டிருந்த நிலையில், வாகனங்கள் குறைவாகவே வந்து கொண்டிருந்ததால் டோல்கேட் ஊழியர்கள் பிளாஸ்டிக்கால் ஆன வாகன தடுப்புகள் மூலம்ஒரு கவுன்ட்டரை அடைத்துக் கொண்டிருந்த போது, அதிவேகமாக வந்து கொண்டிருந்த ஆம்புலன்ஸ் மற்றொரு நுழைவு வழியே செல்ல முற்பட்டது.
ஆனால் மழைகாரணமாக வழுவழுப்பான தார் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் வழுக்கிக் கொண்டு வந்து பூத் மீது மோதியது.
இவ்வாறு சப் இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத் கூறினார்.
டோல்கேட் ஊழியர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஆம்புலன்ஸ் டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
மழை பெய்து சாலை வழுவழுப்பாக இருக்கும் போது, வாகனத்தின் டயருக்கும் சாலைக்கும் உள்ள உராய்வு திறன் மிகவும் குறைந்துவிடும். அப்போது வேகமாக செல்லும் வாகனத்தில் திடீரென பிரேக் அடித்தால் வழுக்கியபடி திசைமாறி விபத்துக்குள்ளாகி விடும்.
இதில் ஏபிஎஸ் எனப்படும் நவீன பிரேக் வசதி உள்ள வாகனங் களும் அடங்கும். எனவே, மழைக்காலத்தில் வாகனங்களில் மெதுவாக சென்றால் விபத்தை தவிர்க்க முடியும் என்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT