Last Updated : 21 Jul, 2022 07:07 AM

34  

Published : 21 Jul 2022 07:07 AM
Last Updated : 21 Jul 2022 07:07 AM

‘‘தலித் என்பதால் உயரதிகாரிகள் மதிப்பதில்லை’’ - யோகி அரசு மீது ஊழல் புகார் கூறி ராஜினாமா செய்த உ.பி அமைச்சர்

புதுடெல்லி: பாஜக ஆளும் உத்தர பிரதேசத்தின் நீர்வளத் துறையில் லஞ்சம், ஊழல் புகார் எழுந்துள்ளது. இதை தெரிவித்த அமைச்சர் தினேஷ் கத்திக் (45), தனது ராஜினாமா கடிதத்தை மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கும் அனுப்பியுள்ளார்.

உ.பி.யின் மீரட் மாவட்டம் அஸ்தினாபூர் தொகுதி பாஜக எம்எல்ஏ தினேஷ் கத்திக். தலித் சமூகத்தவரான இவருக்கு மாநில நீர்வளத் துறை இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அமைச்சர் தினேஷும் தன் தந்தையை போல், சிறு வயது முதல் பாஜக.வின் தாய் அமைப்பான ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்கில் இருந்தவர். இவர் நேற்று திடீரென பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ராஜினாமா கடிதத்தை முதல்வர் ஆதித்யநாத் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அனுப்பிவிட்டார்.

எனினும், மாநில அரசு அமைச்சர் தினேஷின் ராஜினாமாவை உறுதிசெய்யவில்லை. மேலும், தனது புகார் மற்றும் ராஜினாமா கடிதத்தை மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கும் அனுப்பி உள்ளார். அந்தக் கடிதம் சமூகவலைதளங்களில் வைரலானது.

தினேஷ் கத்திக் தனது கடிதத்தில், ‘‘என் நிர்வாகத்தின் கீழ் உள்ள நமாமி கங்கா திட்டத்தின் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பணியிட மாற்றத்துக்காக பெரும் தொகையை லஞ்சமாக பெற்றுள்ளனர்.

இதுகுறித்து நான் பிறப்பித்த உத்தரவுகள் அமல்படுத்தப்படவில்லை. இந்த விவரங்களை கேட்க நான் முதன்மை செயலாளர் அணில் கர்கிற்கு போன் செய்து பேசினேன். அவர் விளக்கம் அளிக்காததுடன், பாதியில் இணைப்பை துண்டித்தார். நான் தலித் என்பதால் உயரதிகாரிகள் மதிப்பதில்லை, அரசு கூட்டங்களுக்கும் அழைக்காமல் புறக்கணிக்கின்றனர்.

எனவே, நான் பதவியை ராஜினாமா செய்கிறேன். எனது புகார்கள் மீது நீங்கள் எந்த அமைப்பின் சார்பில் வேண்டுமானாலும் விசாரணை நடத்தி உண்மையை அறியலாம்’’ என்று கூறியுள்ளார்.

உ.பி. முன்னாள் பாஜக தலைவரும், முதல்வர் ஆதித்யநாத்துக்கு நெருக்கமானவருமான ஸ்வதந்திரா தேவ்சிங்குடன் அமைச்சர் தினேஷுக்கு அதிக கருத்து வேறுபாடுகள் இருந்துள்ளன.

இந்நிலையில், உ.பி.யில் தொடர்ந்து 2-வது முறை முதல்வரானது முதல் அதிகாரிகள், அலுவலர்கள் பணியிட மாற்றங்களை ஆதித்யநாத் உயரதிகாரிகள் மூலம் நேரடியாக செய்வதாக கூறப்படுகிறது. இதில் சம்மந்தப்பட்ட துறை அமைச்சர்களை கலந்து ஆலோசிக்காததுடன், அவர்களது அதிகாரம் பறிக்கப்படுவதாகவும் புகார்கள் உள்ளன.

இதுகுறித்து கடந்த மாதம் ஹைதராபாத்தில் நடந்த பாஜக செயற்குழுக் கூட்டத்தில் மூத்த தலைவர்களிடம் உ.பி. துணை முதல்வர் பிரஜேஷ் பாதக் புகார் கூறியதாகத் தெரிகிறது. இதையும் புகாராக்கி அமைச்சர் தினேஷ் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதற்கிடையில், உ.பி.யின் பொதுப் பணித் துறை அமைச்சர் ஜிதின் பிரசாத்தும், டெல்லியில் முகாமிட்டுள்ளார். அவரும் பல்வேறு புகார்களுடன் பாஜக மேலிடத் தலைவர்களை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

பாஜக.வைப் பொறுத்த வரையில் உட்கட்சி பூசல்கள் அவ்வளவாக வெளிப்படுவதில்லை. முதல் முறையாக பாஜக அரசில் உள்ள அமைச்சர் பகிரங்கமாக நிர்வாகத்தின் மீது புகார் கூறியிருப்பதும் ராஜினாமா செய்திருப்பதும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x