Published : 19 Jul 2022 11:27 PM
Last Updated : 19 Jul 2022 11:27 PM
ராஜஸ்தான்: பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நுபுர் சர்மாவை கொலை செய்ய திட்டமிட்டு பாகிஸ்தானில் இருந்து இந்தியா ஊடுருவிய நபர் எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாஜகவின் முன்னாள் செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா, கியான்வாபி மசூதி சர்ச்சை தொடர்பான தொலைக்காட்சி விவாதத்தில், முஸ்லிம்களின் இறைத்தூதரை அவமதிக்கும் வகையில் பேசியிருந்தார். நுபுர் சர்மா இறைதூதர் நபிகள் பற்றி பேசிய கருத்தை ஆதரித்து டெல்லி பாஜக செய்தி தொடர்பாளர் நவீன்குமார் ஜிண்டால் தனது ட்விட்டரில் ஒரு கருத்தைப் பதிவிட்டு நீக்கினார்.
இதனைத்தொடர்ந்து இந்தியாவுக்கு இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. நாடு முழுவதும் ஆங்காங்கே முஸ்லிம் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். எல்லாவற்றிற்கும் மேலாக உதய்பூரில் தையல் தொழிலாளி ஒருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட, நாட்டில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் நுபுர் சர்மாவுக்கு கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையியல், நுபுர் சர்மாவை கொலை செய்வதற்காக இந்தியாவுக்குள் ஊடுருவிய பாகிஸ்தானியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தானின் ஸ்ரீ கங்கா நகர் மாவட்டத்தில் அந்த நபரை கைது செய்துள்ளனர் புலனாய்வு போலீஸார். நேற்றுமுன்தினம் இரவு 11 மணியளவில், இந்துமல்கோட் எல்லைப் புறக்காவல் நிலையத்திற்கு அருகில் இருந்து அந்த நபர் கைது செய்யப்பட்டதாக பிஎஸ்எஃப் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான வகையில் பாகிஸ்தான் நபர் நின்றுகொண்டிருக்க, அவரை விசாரிக்கையில் நுபுர் சர்மாவை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும், அவரிடமிருந்து 11 அங்குல நீளமுள்ள கத்தி, மதப் புத்தகங்கள், உடைகள், உணவுகள் ஆகியவற்றை மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர், பாகிஸ்தானின் வடக்கு பஞ்சாபில் அமைந்துள்ள மண்டி பஹவுதீன் நகரைச் சேர்ந்த ரிஸ்வான் அஷ்ரப் என்பது தெரியவந்துள்ளது.
மூத்த அதிகாரி ஒருவர் வடமாநில ஊடகங்களுக்கு பேசுகையில், நுபுர் சர்மாவை கொலை செய்வதற்கு முன்பு அஜ்மீர் தர்காவுக்குச் செல்ல திட்டமிட்டிருந்தார் என்பதை வெளிப்படுத்தினார். அந்த நபர், நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு எட்டு நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் ஐபி, ரா மற்றும் ராணுவ உளவுத்துறை ஆகிய அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT