Published : 19 Jul 2022 06:23 AM
Last Updated : 19 Jul 2022 06:23 AM
புதுடெல்லி: கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நேரத்தை வீணடிக்காமல் உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
இழப்பீடு கிடைக்காதவர்கள் மற்றும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் தங்கள் புகார்களை குறைதீர் குழுவிடம் தெரிவிக்கலாம் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது. இதுபோன்ற புகார்களுக்கு 4 வாரங்களுக்குள் குறைதீர் குழு தீர்வு காண வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நாட்டில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து தலா ரூ.50,000 வழங்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
ஆனால், நிவாரண நிதி வழங்குவதில் மாநில அரசுகள் காலதாமதம் செய்வதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. குறிப்பாக ஆந்திர அரசு இந்த நிதியை வேறு வகையில் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் புதிதாக 16,935 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 51 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 5,25,760 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT