Last Updated : 19 Jul, 2022 05:25 AM

3  

Published : 19 Jul 2022 05:25 AM
Last Updated : 19 Jul 2022 05:25 AM

சுதந்திர தினத்தன்று நாடு முழுவதும் 100 கோடி தேசியக் கொடிகள் பறக்கவிட ஏற்பாடு - அமித்ஷா அறிவிப்பு

புதுடெல்லி: ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று நாடு முழுவதும் 100 கோடி தேசியக் கொடிகள் பறக்கவிடப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார்.

‘அம்ருத் மசோத்சவ் ஆஸாதி’ என்ற பெயரில் 75-ம் ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டம் நாடு முழுவதிலும் நடைபெற்று வருகிறது. இதன் உச்சமாக, ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடுவது குறித்து மத்திய அரசு ஆலோசனை கூட்டம் நடத்தியது.

‘ஹர் கர் திரங்கா (ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ண கொடி)’ என்ற தலைப்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நேற்று முன்தினம் இணைய வழியில் கூட்டம் நடைபெற்றது. உள்துறை இணை அமைச்சர் ஜி.கிஷண்ரெட்டி, மாநில முதல்வர்கள் பலர் இதில் பங்கேற்றனர்.

அமைச்சர் அமித் ஷா பேசுகையில், ‘‘ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று 100 கோடிக்கும் அதிகமான தேசியக் கொடிகள் நாடு முழுவதும் பறக்கவிடப்பட உள்ளன. இதன்மூலம், குழந்தைகள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைவரின் தேச பக்தி வெளிப்பட உள்ளது. உலக நாடுகளில் முதல் முறையாக நடத்தப்படும் இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கான தேசியக் கொடிகள், தபால் நிலையங்களிலும், இணையதள சந்தைகளிலும் கிடைக்கும். ஜுலை 22 முதல் அரசு இணையதளங்களில் சுதந்திர தின முத்திரையும், வாசகமும் இடம்பெற உள்ளன.

பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களிலும் ஆகஸ்ட்11 முதல் 14 வரை தேசியக்கொடிகளை ஏற்றி அதன் பதிவுகளை இணையதளங்களில் பதிவேற்றலாம்’’ என்று தெரிவித்தார்.

இதே கூட்டத்தில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசும் போது, ‘‘பிரதமரின் முக்கியப் பார்வையிலான இந்த நாளை உ.பி.யிலும் மிகச் சிறப்பாகவும், வைராக்கியத்துடனும் கொண்டாட திட்டமிடப்படுகிறது. இந்த தினத்துக்காக ஆகஸ்ட் 11 முதல் 17 வரை சுதந்திர தின வாரமாக உ.பி.யின் ஒவ்வொரு கிராமம் உட்பட அனைத்து இடங்களிலும் தேசியக்கொடியை ஏற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது. இளம் தலைமுறையினர் இடையே நம் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது நம் அனைவரின் தார்மீகக் கடமையாகும். இதில் நம் நாட்டின் பாதுகாப்பையும், செழிப்பையும் இணைத்துக் கூறப்பட வேண்டும்’’ என்றார்.

சுதந்திர தினக் கொண்டாட்டத்துக்காக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறையினரிடம் இருந்து இணையதளம் வழியாக 2 கோடி தேசியக் கொடிகளை வாங்க உ.பி. அரசு திட்டமிட்டுள்ளது.

மேலும், 1.18 கோடி தேசியக் கொடிகளை மாநில சுய உதவிக் குழுக்கள், பொதுநல அமைப்புகள் மற்றும் தனியாரிடம் விலைக்கு பெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x