Published : 18 Jul 2022 08:58 PM
Last Updated : 18 Jul 2022 08:58 PM
தார்/ மத்தியப்பிரதேசம்: மகாராஷ்டிரா போக்குவரத்து கழகத்தைச் சேர்ந்த பேருந்து ஒன்று மத்தியப் பிரதேச மாநிலம் தார் பகுதியில் நர்மதை ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் பலியாகினர்.
மகாராஷ்டிரா மாநில போக்குவரத்து கழகமான எம்எஸ்ஆர்டிசி-யைச் சேர்ந்த பேருந்து ஒன்று திங்கள்கிழமை காலை 7.30 மணிக்கு மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரிலிருந்து புனே நோக்கி சுமார் 40 பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது.
பேருந்து தார் மாவட்டத்தில் உள்ள ஆக்ரா - மும்பை நெடுஞ்சாலையில் கல்காட் பாலத்தில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்புகளை இடித்துக் கொண்டு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 13 பேர் பலியாகினர் என்றும், 15 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் மத்தியப் பிரதேச மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து குறித்து மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானிடம் தொலைப்பேசியில் பேசி விபரம் அறிந்து கொண்டார்.
பிரதமர் இரங்கல்:
விபத்து குறித்து ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, "மத்தியப் பிரதேசம் தார் பகுதியில் நேரிட்ட பேருந்து விபத்து வருத்தமளிக்கிறது. எனது எண்ணம் முழுவதும் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுடன் உள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. உள்ளூர் அதிகாரிகள், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.
நிவாரணம்:
தார் பகுதியில் நடந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "மத்தியப் பிரதேச மாநிலம் தார் பகுதியில் நேரிட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளர்" என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோல, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க மகாராஷ்டிரா மாநில போக்குவரத்து துறைக்கு அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் அலுவலக செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT