Published : 17 Jul 2022 01:49 AM
Last Updated : 17 Jul 2022 01:49 AM
கோனசீமா: ஆந்திராவில் கனமழை காரணமாக மணப்பெண் படகு சவாரி செய்து திருமணம் முடித்து வீடியோ வைரலாகி வருகிறது.
ஆந்திராவில் 36 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை பொழிந்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல மாவட்டங்கள் நீரில் தத்தளிக்கின்றன. குறிப்பாக கோதாவரி ஆற்றின் நீர்மட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மேற்கு கோதாவரி மற்றும் கோனாசீமா மாவட்டங்களில் உள்ள பல்லாயிரக்கணக்கான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, மாமிடிகுடுரு பகுதிக்கு அருகில் உள்ள பெடப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த கந்தா அசோக் குமார் மற்றும் அப்பனப்பள்ளி பகுதியைச் சேர்ந்த நல்லி பிரசாந்தி என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயக்கப்பட்டிருந்தது. கடலோர ஆந்திராவில் அமைந்துள்ள கோனசீமா மாவட்டத்தில் பெய்த கனமழையால் அப்பனப்பள்ளி பகுதி முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டது. இதனால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நின்று போகும் நிலை உருவானது. மாமிடிகுடுரு பகுதியைச் செல்வதற்கு தரைவழி அனைத்தும் துண்டிக்கப்பட்டிருந்தன.
எனினும், திட்டமிட்டபடி திருமணத்தை நடத்த முடிவு செய்த மணமக்களின் குடும்பத்தினர் மாற்று வழிகளை சிந்தித்தனர். அதன்படி, படகு மூலம் மணமகன் இல்லத்தை அடைய முடிவு செய்த மணப்பெண் பிரசாந்தி குடும்பத்தினர் அதற்கான ஏற்பாடுகளை செய்தனர். மணப்பெண் அலங்காரத்துடன் பிரசாந்தி தயார் ஆக, குடும்பத்தினர் ஒரு படகு மூலம் தென்னந்தோப்புகளின் வழியாக அப்பனப்பள்ளி பகுதியில் இருந்து மணமகனின் பெடப்பட்டினம் அடைந்தனர். அங்கிருந்து மணமகள் மற்றும் அவரது குடும்பத்தினர் காரில் சென்று திருமணம் செய்துகொண்டனர்.
கோதாவரி நதியின் நீர்மட்டம் உயர்ந்து ஒவ்வொரு ஆண்டும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் இருப்பதால் பெடப்பட்டினத்தை தீவு கிராமம் என்றே அழைப்பதாக கூறப்படுகிறது. ஆகஸ்ட் மாதத்தில் இப்பகுதி பொதுவாக கனமழையை எதிர்கொள்ளும் என்பதால் முன்கூட்டியே திட்டமிட்டு, திருமணத்தை ஜூலையில் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர் அவர்களின் குடும்பத்தினர். ஆனால், ஜூலை மாதமே பருவமழை பெரிதாக பெய்ய கிராமத்தில் வெள்ளம் சூழ்ந்தது.
இதையடுத்தே, திருமணத்தை தள்ளிவைக்க விரும்பாமல் திட்டமிட்ட தேதியில் படகு சவாரி செய்து நடத்தி முடித்துள்ளனர். மணமகள் பிரசாந்தி மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட பெண்கள் குழுவினர் படகில் சவாரி செய்யும் வீடியோ காட்சிகள் வெளியாக தற்போது அது ட்ரெண்ட் ஆகி வருகிறது.
Fully decked up #BrideOnBoat, making her way to d groom's place along with family members: Prashanti & Ashok reportedly chose a date in July over August to have rain hassle-free wedding but a #TruantMonsoon left #AndhraPradesh's #Konaseema flooded #MonsoonWedding @ndtv @ndtvindia pic.twitter.com/iauxbSNIyQ
— Uma Sudhir (@umasudhir) July 15, 2022
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT