Published : 16 Jul 2022 10:54 PM
Last Updated : 16 Jul 2022 10:54 PM
பேர்ட்பிளேர்: 2024-25-ஆம் ஆண்டில் ரூ. 1 லட்சம் கோடி அளவுக்கு மீன் உள்ளிட்ட கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
இரண்டு நாட்கள் அரசுமுறைப் பயணமாக அந்தமான் சென்றுள்ள மத்திய இணை அமைச்சர் எல். முருகன் அந்தமான் தொழில் வர்த்தகக் கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் சனிக்கிழமை கலந்துரையாடினார். அப்போது, மீன்வளம், சுற்றுலா, எளிதில் தொழில் மேற்கொள்வதற்கான அரசின் வழிமுறைகள், அதற்கான அனுமதி தொடர்பான விஷயங்கள் குறித்து அமைச்சரிடம் விளக்கிய தொழில்துறையினர், பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் முருகன் கூறியதாவது, "நீங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு உரிய தீர்வு காணப்படும். 2024-25-ம் ஆண்டில் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு மீன் உள்ளிட்ட கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது அது 43 ஆயிரம் கோடியாக உள்ளது. 2022-23-ம் ஆண்டில் ரூ.60 ஆயிரம் கோடிக்கு கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சுத்தமான மீன்கள், குளிர்பதனக் கிடங்குகள் போன்றவை மூலமே நாம் சர்வதேச அளவில் ஏற்றுமதி செய்ய முடியும். எனவே அதைக் கருத்தில் கொண்டே பிரதமரின் 'மத்சய சம்படா' திட்டத்தின் கீழ் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறோம். மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு உள்கட்டமைப்பை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்.
அதன் அடிப்படையில் சுமார் 900 கோடி மதிப்பில் சென்னை, கொச்சி, விசாகப்பட்டினம் உள்பட 5 மீன்பிடித் துறைமுகங்களை நவீனப்படுத்தி மேம்படுத்தி வருகிறோம். அதோடு குளிர்பதனக் கிடங்கு அமைத்தல், மீன் பதப்படுத்தும் நிலையம் அமைத்தல், ஆழ்கடல் மீன் வளர்ப்பு போன்ற திட்டங்களும் செயல்படுத்தப்படும்" என்று எல்.முருகன் தெரிவித்தார். இந்தக் கூட்டத்திற்கு அந்தமான் தொழில் வர்த்தகக் கூட்டமைப்பின் தலைவர் சுரேந்தர் பிரஹலாத் தலைமை தாங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT