Published : 16 Jul 2022 01:15 PM
Last Updated : 16 Jul 2022 01:15 PM
லக்னோ: மோடி-யோகி அரசு வளர்ச்சியை உத்தரப்பிரதேச நகரங்களில் மட்டுமல்ல கிராமங்களிலும் உறுதி செய்யும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் புதிதாக நான்கு வழி விரைவுச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச விரைவுச்சாலை தொழில் வளர்ச்சி ஆணையம் சார்பில் இந்த விரைவுச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் இந்த சாலைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அதன்பின் பணிகள் தொடங்கப்பட்டு 28 மாதங்கள் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. சுமார் 14 ஆயிரத்து 850 கோடி செலவில் 296 கிமீ நீளத்தில் இந்த நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. சித்ரகூடில் உள்ள கோண்டா கிராமத்தில் உள்ள என்.எச்-35-ல் தொடங்கும் இந்த சாலையானது, பண்டா,மஹோபா, ஹமிர்பூர், ஜலான், ஔரையா மற்றும் எட்டாவா ஆகிய 8 மாவட்டங்கள் வழியாக செல்கிறது. அதன்பின், ஆக்ரா-லக்னோ விரைவுச் சாலையுடன் இணைகிறது.
இந்தச் சாலையை இன்று உ.பி. மக்களுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி. அப்போது அவர், "இந்த விரைவுச் சாலை புந்தல்கண்டை வளர்ச்சி, சுய வேலைவாய்ப்பு, இன்னும் பிற தொழில் வாய்ப்புகளுக்கு இட்டுச் செல்லும். உத்தரப் பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு நிலவரமும், சாலை விரிவாக்கமும் சரி செய்யப்பட்டால் இந்த மாநில எல்லா சவால்களையும் எதிர்கொண்டு வெற்றி பெறும். பாஜக ஆட்சியில் இந்த இரண்டுமே தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு வெகுவாக மேம்பட்டுள்ளது. மோடி-யோகி அரசு வளர்ச்சியை நகரங்களுக்கு மட்டுமல்ல கிராமங்களுக்கு எடுத்துச் செல்லும்" என்றார்.
சமாஜ்வாதி மீது தாக்கு: "இதற்கு முந்தைய ஆட்சியின்போது சரயு திட்டத்தை நிறைவேற்ற 40 ஆண்டுகள் ஆனது. கோரக்பூர் உரத் தொழிற்சாலை 30 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்தது. அர்ஜூன் அணைத் திட்டம் நிறைவேற 12 ஆண்டுகளாயிற்று. அமேதி ரைஃபிள் தொழிற்சாலைக்கு ஒரு போர்டு மட்டுமே வைத்திருந்தனர். ரே பெரேலி ரயில் பெட்டி தொழிற்ச்சாலை ரயில் பெட்டிகளுக்கு பெயின்ட் அடிப்பதை மட்டுமே செய்துவந்தன. ஆனால் இப்போது உத்தரப்பிரதேசத்தில் உட்கட்டுமானம் மேம்பட்டுள்ளது. உ.பி.யின் அடையாளம் மாறிவருகிறது" என்று பிரதமர் மோடி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT