Published : 16 Jul 2022 12:21 PM
Last Updated : 16 Jul 2022 12:21 PM
புதுடெல்லி: உத்தரப்பிரதேசம் மேற்குப்பகுதியின் மசூதியினுள் முதியவர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பபட்டார். பாதுகாப்பானதாகக் கருதப்பட்ட ஒரே இடமான மசூதியில் நடத்தப்பட்ட கொலையால் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.
உ.பி.,யின் புலந்ஷெஹர் மாவட்டத்தில் அமைந்துள்ள கூர்ஜா. அலிகருக்கு அருகிலுள்ள இந்த சிறிய நகரம், முகலாயர் காலம் முதல் பீங்கான் பொருள் தயாரிப்பிற்கு பெயர்போனது. இங்குள்ள ஷேக் பென் பகுதிவாசி தொழிலதிபர்களில் ஒருவராக வாழ்ந்தவர் முகம்மது இதிரீஸ்(65). இவர் நேற்று காலை வழக்கம் போல், அருகிலுள்ள மசூதியில் விடியற்காலை தொழுகைக்கு சென்றுள்ளார்.
தொழுகைக்குப் பின் அங்கு அமர்ந்து பிரார்த்தனையை தொடர்ந்திருக்கிறார் இதிரீஸ். அப்போது, மசூதியினுள் திடீர் என கைத்துப்பாக்கிகளுடன் ஒரு கும்பல் நுழைந்துள்ளது.
இவர்கள் மசூதியினுள் இதிரிஸை குறி வைத்து சராமரியாக சுட்டுத் தள்ளினர். பிறகு இதிரிஸின் உயிர் போனதை உறுதி செய்த பின் மசூதியிலிருந்து கிளம்பியுள்ளனர். வெளியில் வரும்போது தங்களை எவரும் வளைத்து பிடிக்காத வகையில் வானிலும் துப்பாக்கி குண்டுகளை முழக்கி எச்சரித்துள்ளனர். இதனால், மசூதியினுள் ரத்தவெள்ளத்தில் மிதந்துள்ளார் இதிரீஸ்.
பிறகு உ.பி. காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு போலீஸ் படை அங்கு குவிந்தது. இதில், அப்பகுதி சரகமான மீரட்டின் ஐஜி பிரவீன் குமார், புலந்தஷெஹர் மாவட்ட ஆட்சியரான சந்திர பிரகாஷ் சிங் மற்றும் எஸ்எஸ்பியான ஸ்லோக் குமார் ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர்.
இது குறித்து ஐஜி பிரவீன் குமார் கூறும்போது, "பலியான இதிரீஸின் மனைவி பஹீமா அளித்த புகாரில், உள்ளூர் ரவுடிக் கும்பலின் தலைவனான சர்ப்ராஸ் இந்தக் கொலையை செய்ததாகக் கூறியுள்ளனர். விரைவில் குற்றவாளி பிடிக்கப்படுவார்." எனத் தெரிவித்தார்.
பலியான இதிரீஸுக்கு ஐந்து மகன்கள் உள்ளனர். இவர்கள் அனைவருமே கூர்ஜாவில் தொழில் செய்து வருபவர்கள். இதிரீஸுடன் உள்ளூர் ரவுடியான சர்ப்ராஸுடன் முன் விரோதம் ஏற்பட்டுள்ளது. அதே பகுதியில் வசிக்கும் சர்ப்ராஸ் இரண்டு வருடங்களுக்கு முன் இதிரீஸின் இளைய மகனான இம்ரானை மிரட்டி பணம் பறிக்க முயற்சித்துள்ளார். இதனால், சர்ப்ராஸ் மீது இதிரீஸ் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
இதன் நடவடிக்கையாக சர்ப்ராஸ் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பிறகு ஜாமீனில் விடுதலையானவர், இதிரீஸை பழி வாங்குவதுடன் அவரிடம் முன்பு கேட்ட பணத்தை பறிக்காமல் விடுவதில்லை என சவால் விடுத்துள்ளார்.
இதை தொடர்ந்து நேற்று மசூதியினுள் இதிரீஸ் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இதுபோல், உ.பி.யின் மசூதிகளின் உள்ளே துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்ததில்லை எனக் கருதப்படுகிறது.
இதன் காரணமாக, முஸ்லீம்களின் புனிதமான அந்த இடத்திலும் பாதுகாப்புகள் கேள்விக்குறியாகி விட்டது. இந்த சம்பவத்திற்கு பின் தலைமறைவாகி விட்ட ரவுடி சர்ப்ராஸ் உ.பி போலீஸாரால் தேடப்பட்டுவருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT