Published : 29 May 2016 11:31 AM
Last Updated : 29 May 2016 11:31 AM

என்.டி.ராமராவுக்கு பாரத ரத்னா விருது: தெலுங்கு தேசம் கட்சி மாநாட்டில் கோரிக்கை

மறைந்த நடிகரும், தெலுங்கு தேசம் கட்சி நிறுவனருமான என்.டி. ராமராவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என, தெலுங்கு தேசம் கட்சியின் திருப்பதி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருப்பதியில் நடைபெற்று வரும் 35-வது தெலுங்கு தேசம் கட்சி மாநாட்டில் 2-ம் நாளான நேற்று என்.டி.ராமராவின் 93-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவச் சிலைக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு, மகன் பாலகிருஷ்ணா,அமைச்சர்கள் மற்றும் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் சந்திரபாபு நாயுடு மாநாட்டில் பேசியதாவது:

மறைந்த என்.டி.ராமராவ், புராண பாத்திரங்களில் நடித்து மக்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர். நிஜ வாழ்க்கையில் என்.டி. ராமராவுக்கு நடிக்க தெரியாது. இவர் தெலுங்கர்களின் அடையாளம்.

‘சமுதாயமே கோயில், மக்களே கடவுள்’ என்பதை லட்சியமாக கொண்டு தெலுங்கர்களின் சுயமரியாதைக்காக தெலுங்கு தேசம் கட்சியை உருவாக்கினார். கட்சியை தொடங்கிவெறும் 9 மாதங்களில் ஆட்சியை பிடித்து சாதனை படைத்தவர் என்.டி.ஆர்.

ரூ. 2-க்கு ஒரு கிலோ அரிசி திட்டம், ஒற்றை சாளர முறை, ஏழைகளுக்கு ‘பக்கா வீடு’கள் என அவர் தொடங்கி வைத்த பல திட்டங்களால் அவர் ஏழை, எளியோர் மீது கொண்டுள்ள பாசம் நமக்கு புரியும்.

60 வயதுக்கு பின்னர்தான் அவர் அரசியலில் பிரவேசித்தார். சினிமா, அரசியல் ஆகிய இரண்டிலும் அவர் புகழ்பெற்றார். இதுபோன்று புகழ்பெறுவது மிக அரிது. தெலுங்கு மொழியை மிகச்சரியாக உச்சரிப்பவர் என்.டி.ஆர். தெலுங்கு கலாச்சாரத்திற்கு அவர் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்ந்தார்.

என்.டி.ஆர் போன்ற ஒரு மகா கலைஞனுக்கு இன்னமும் ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்படாதது வருத்தம் அளிக்கிறது. புதிதாக உருவாகி வரும் அமராவதி நகரில் 115.5 அடி உயரத்தில் என்.டி.ராமராவுக்கு சிலை அமைக்கப்படும்.

தமிழகத்தில் உள்ள ‘அம்மா உணவகம்’ போல, விரைவில் ஆந்திர மாநிலத்தில் ‘அண்ணா கேன்டீன்’ கள் அமைக்கப்படும்.

திருமலைக்கு வரும் பக்தர் களுக்காக என்.டி.ஆர் அவரது ஆட்சிக் காலத்தில் இலவச அன்னதான திட்டம் தொடங்கினார். அதனால், அவரது பெயரிலேயே ‘அண்ணா கேன்டீன்’ அமைத்து ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்கப்படும்.

இவ்வாறு முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசினார்.

முன்னதாக, என்.டி.ராமராவுக்கு கட்டாயமாக பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என மாநாட்டில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x