Published : 14 Jul 2022 10:53 PM
Last Updated : 14 Jul 2022 10:53 PM

நாம் அனைவரும் பொதுவான நோக்கம், நலன்களைக் கொண்டுள்ளோம் - ஐ2யு2 உச்சி மாநாட்டில் பிரதமர் உரை

புதுடெல்லி: உலகளாவிய நிச்சயமற்ற தன்மை அதிகரித்து வரும் வேளையில், ஐ2யு2 நாடுகளின் கூட்டுறவு கட்டமைப்பு, நடைமுறை ஒத்துழைப்புக்கு சிறந்த முன்மாதிரியாக திகழ்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நான்கு நாடுகளின் கூட்டமைப்பான ஐ2யு2 -ன் முதல் மெய்நிகர் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி வியாழக்கிழமை உரையாற்றினார். அப்போது அவர் பேசியாதாவது. "முதலாவதாக புதிதாக இஸ்ரேலின் பிரதமர் பொறுப்பை ஏற்றுள்ள லேபிட்டுக்கு பாராட்டுக்கள், நல்வாழ்த்துக்களை தெரிவிக்கும் அதே வேலையில், இன்றைய உச்சி மாநாட்டை நடத்துவதற்காகவும் அவருக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த கூட்டம் உண்மையான, நிலையான பங்குதாரர்களின் கூட்டமாகும். நாம் அனைவரும் சிறந்த நண்பர்களாக திகழ்வதோடு, பொதுவான நோக்கங்கள், பொதுவான நலன்களை கொண்டுள்ளோம்.

“ஐ2யு2” (I2U2) இன்றைய முதல் உச்சிமாநாட்டிலேயே ஆக்கப்பூர்வ செயல் திட்டத்தை கொண்டதாக உள்ளது. பல்வேறு துறைகளில் கூட்டாக மேற்கொள்ளக்கூடிய திட்டங்களை நாம் அடையாளம் கண்டுள்ளோம். மேலும் அவற்றை முன்னெடுத்துச் செல்வதற்கான வழிமுறையையும் உருவாக்கியுள்ளோம்.

முதலீடு, நிபுணத்துவம் மற்றும் சந்தைகள் ஆகிய, நம் நாடுகளின் பரஸ்பர வலிமையை ஓரணியில் திரட்டுவதன் மூலம் நமது செயல்திட்டத்தை விரிவுப்படுத்துவதோடு, சர்வதேச பொருளாதாரத்திற்கு கணிசமான பங்களிப்பை வழங்குவோம்.

உலகளாவிய நிச்சயமற்ற தன்மை அதிகரித்து வரும் இந்த வேளையில், நமது கூட்டுறவு கட்டமைப்பு, நடைமுறை ஒத்துழைப்புக்கு சிறந்த முன்மாதிரியாக திகழ்கிறது. எரிசக்தி பாதுகாப்பு, உணவு பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியில் உலக அளவில் “ஐ2யு2”(I2U2) அமைப்பு, கணிசமான பங்களிப்பை வழங்கும் என்று நான் நம்புகிறேன்" இவ்வாறு பிரதமர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x