Published : 10 May 2016 09:07 AM
Last Updated : 10 May 2016 09:07 AM
துபாயில் பணியாற்றி வந்த இந்திய இளம் பெண் சித்வரதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக விசாரணை நடத்தும்படி வெளியுறவுத் துறையிடம் முறையிடப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்தவர் ஹசினா காத்தூன் (25). துபாயில் உள்ள ரியாத் மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாக கூறி ஹசினாவை கடந்த மாதம் தரகர்கள் அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு தரகர்கள் கூறியபடி மருத்துவமனையில் வேலை கிடைக்கவில்லை. மாறாக, அப்துல் ரஹ்மான் அலி என்பவரது வீட்டில் பணிப்பெண் வேலை தான் கிடைத்தது. குடும்ப சூழ்நிலை காரணமாக ஹசினா அந்த வேலையில் சேர்ந்தார்.
ஆனால் ஒரு சில நாட்களிலேயே அந்த வீட்டில் உள்ளவர்கள் ஹசினாவை பல்வேறு விதமாக சித்ரவதை செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்து தொலைபேசி மூலம் ஹைதராபாத்தில் உள்ள தனது குடும்பத்தினரிடம் பேசிய ஹசினா, காலை முதல் மாலை வரை தன்னை ஒரு இருட்டு அறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்துவதாகவும், தனது உடலில் சூடு வைப்பதாகவும் தெரிவித்து கதறி அழுதுள்ளார்.
கடந்த 2-ம் தேதி திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஹசினா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த தகவல் அறிந்ததும் அதிர்ச்சியில் துடித்த ஹசினாவின் தாயார் கவுசியா தனது மகளின் சடலத்தையாவது பத்திரமாக மீட்டு தாய்நாட்டுக்கு கொண்டு வரும்படி தெலங்கானா அரசிடம் வலியுறுத்தியுள்ளார். அதன் அடிப்படையில் இந்திய வெளியுறவு துறைக்கும், துபாயில் உள்ள இந்திய தூதரகத்துக்கும் தெலங்கானா மாநில அரசு சார்பில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தனது மகளை ஏமாற்றி துபாய்க்கு அனுப்பி வைத்த தரகர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவுசியா ஹைதராபாத் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT