Last Updated : 13 Jul, 2022 06:55 AM

4  

Published : 13 Jul 2022 06:55 AM
Last Updated : 13 Jul 2022 06:55 AM

கியான்வாபி மசூதி வழக்கில் திருப்பம்: முஸ்லிம்களுக்கு சாதகமாக இந்து தரப்பு வழக்கறிஞர் செயல்படுவதாக புகார்

புதுடெல்லி: உத்தர பிரதேசம், வாரணாசியில் பழம்பெரும் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டியபடி கியான்வாபி மசூதி அமைந்துள்ளது. அங்கிருந்த கோயிலை இடித்து முகலாய மன்னர் அவுரங்கசீப், மசூதி கட்டியதாகக் கூறப்படுகிறது. இதன் மீதானவழக்குகள் நடைபெற்று வரும் நிலையில், காசி விஸ்வநாதர் கோயிலில் இருக்கும் சிங்காரக் கவுரி அம்மனை தினமும் வழிபட அனுமதி கோரி வழக்கு தொடுக்கப்பட்டது.

இது, மசூதியின் வளாக சுவரில் அமைந்திருப்பதால் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் அம்மனை வழிபட அனுமதி வழங்கப்படுகிறது. இந்த வழக்கில் வாரணாசி சிவில் நீதிமன்றம், மசூதிக்குள் களஆய்வு நடத்த உத்தரவிட்டது. மத்திய வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்பு சட்டம் 1991-ன்படி, களஆய்வுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மசூதி நிர்வாகமான அஞ்சுமன் இன்தஜாமியா கமிட்டியினர் கோரினர்.

இவர்களது மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வாரணாசியின் மாவட்ட நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி விசாரணைக்கு மாற்றியது. இதற்கு முன்பாக நடத்தி முடிக்கப்பட்ட களஆய்வில் மசூதியின் ஒசுகானாவின் நடுவே சிவலிங்கம் கிடைத்தது. இதனால், ஒசுகானாவை சீல் வைக்க வாரணாசி சிவில் நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவை தொடரவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டம் 1991 படி மசூதி மீது வழக்கு தொடர முடியுமா என்பதில் இந்து தரப்பின் வாதம் முடிந்தது. முஸ்லிம்கள் தரப்பின் வாதம் நேற்று தொடர்ந்து, நடந்து முடிந்தது. முஸ்லிம்களின் வாதம் மீதான மறுப்பை இந்து தரப்பினரும் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் இந்து தரப்பில்ஒரு திடீர் திருப்பம் நிகழ்ந்துள்ளது. தமது தரப்பின் 5 மனுதாரர்களில் ராக்கி சிங்கின் வழக்கறிஞரான விஷ்ணு ஜெயின் மீது, இந்து தரப்பினர் நீதிபதி அஜய் கிருஷ்ணா விஸ்வாஸ் முன்பாக புகார் செய்தனர். இதற்கான ஆதாரங்களையும் முன்வைத்து நடவடிக்கை எடுக்கும்படி கோரினர்.

இந்து தரப்பினர் முன்வைத்த புகாரில், ‘அரசு தரப்பு வழக்கறிஞர் குழுவில் இடம் பெற்றுள்ள விஷ்ணுஜெயின், அரசுக்கு எதிரான வழக்கில் ஆஜராகி உள்ளார். இவர், டெல்லியின் முஸ்லிம் அமைப்பான இந்தியன் இஸ்லாமிக் சென்டரின் அதிகாரப்பூர்வ உறுப்பினராகவும் உள்ளார். இந்த சென்டரின் காப்பாளர்களில் ஒருவராக காங்கிரஸ்தலைவர் சோனியா காந்தி உள்ளார். இவர் மூலம், விஷ்ணு ஜெயின் இந்துக்களுக்கு எதிரானநடவடிக்கையில் ஈடுபடும் வாய்ப்புகள் உள்ளன. விஷ்ணு ஜெயினின் தவறான நடவடிக்கைகளால், கியான்வாபி மீதான வழக்கு முஸ்லிம்களுக்கு சாதகமாக முடியும் வாய்ப்புகள் உள்ளன’ எனத் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, சிங்காரக் கவுரி அம்மன் தரிசன வழக்கின் 4 இந்து பெண்களும் ஒன்றிணைந்து, ‘ஆதி மகாதேவ் காசி தர்மாலாயா முக்தி நியாஸ்’ எனும் பெயரில் அறக்கட்டளை அமைத்துள்ளனர். இதன் சார்பில் திரட்டப்படும் நிதி உதவியால், கியான்வாபி மசூதி மீதான வழக்குகளை அறக்கட்டளை முன்னின்று நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x