Published : 12 Jul 2022 02:58 PM
Last Updated : 12 Jul 2022 02:58 PM
கோஹிமா: “மக்கள் தொகைப் பெருக்கத்தை கட்டுப்படுத்த என்னைப் போல் சிங்கிளாக இருங்கள்” என்று நாகலாந்து மாநில அமைச்சர் பேசியுள்ளது கவனம் ஈர்த்துள்ளது.
உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபை உலகில் வாழும் மக்கள் தொகை குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் நவம்பர் 12, 2022-ல் உலக மக்கள் தொகை 800 கோடியாக உயர்ந்திருக்கும் என்றும், தற்போது இந்தியாவின் மக்கள் தொகை 141 கோடியே 20 லட்சமாகவும், சீனாவின் மக்கள் தொகை 142 கோடியே 60 லட்சமாகவும் உள்ளது. இந்த எண்ணிக்கையை இந்தியா அடுத்த ஆண்டு மிஞ்சிவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் மக்கள் தொகையை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கையை எடுத்துவருகிறது. இதனிடையே, நாகலாந்து மாநிலத்தின் உயர் கல்வி மற்றும் பழங்குடியினத் துறை அமைச்சர் டெம்ஜென் இம்னா அலோங், மக்கள் தொகை பெருக்கம் குறித்து தெரிவித்துள்ள கருத்து கவனம் பெற்றுள்ளது. உலக மக்கள்தொகை தினத்தையொட்டி, குடும்பக் கட்டுப்பாடு குறித்து அறிந்துகொள்ள மக்களை வற்புறுத்தியவர், அதற்காக ஒரு தீர்வையும் முன்வைத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்வீட்டில், “உலக மக்கள் தொகை தினத்தையொட்டி, மக்கள் தொகைப் பெருக்கம் தொடர்பான பிரச்சினைகளில் விழிப்புணர்வோடு இருப்போம். குழந்தைப் பேறு மற்றும் குடும்பக் கட்டுப்பாடு குறித்த தகவல்களை அறிந்து செயல்படுங்கள். அல்லது என்னைப் போல் சிங்கிளாக இருங்கள். இப்படி செயல்பட்டால் மட்டுமே நாம் ஒரு நிலையான எதிர்காலத்திற்கு பங்களிக்க முடியும். இன்றே 'சிங்கிள்ஸ்' இயக்கத்தில் சேருங்கள்” என்று தெரிவித்துள்ளார் அமைச்சர் டெம்ஜென் இம்னா அலோங்.
அவரின் இந்தக் கருத்து நகைச்சுவையாக ட்ரெண்டிங் செய்யப்பட்டு வருகிறது. நெட்டிசன்கள் அவரின் காமெடியாக கலாய்த்துவருகின்றனர். இப்போது மட்டுமல்ல, பலமுறை இதேபோல் நகைச்சுவைக் கருத்துகளை சொல்லியிருக்கிறார் டெம்ஜென் இம்னா. சில நாட்கள் முன்புகூட வடகிழக்கு மக்களுக்கு கண்கள் சிறிதாக இருப்பதன் பலன்கள் என்று நீண்ட விளக்கத்தை கொடுத்தது வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான நாகலாந்தை பாஜக ஆட்சி செய்து வருகிறது. இந்த ஆட்சியில் பாஜக சார்பில் உயர் கல்வி மற்றும் பழங்குடியினத் துறை அமைச்சராக இருந்துவரும் டெம்ஜென் இம்னா அம்மாநிலத்தின் பாஜக தலைவரும்கூட. அவருக்கு 41 வயது ஆகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT