Published : 11 Jul 2022 05:56 PM
Last Updated : 11 Jul 2022 05:56 PM

நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை புதிய சம்மன் 

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு நாளிதழுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் ஆஜராக சோனியா காந்தி கூடுதல் அவகாசம் கோரியிருந்த நிலையில் ஜூலை 21ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு அமலாக்க இயக்குநரகம் புதிய சம்மன் அனுப்பியுள்ளது.

அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தை (ஏஜெஎல்) சுதந்திரத்துக்கு முன்பு ஜவஹர்லால் நேரு தொடங்கினார். இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் பங்குதாரர்களாக இருந்தனர்.

இதன் சார்பில் நேஷனல் ஹெரால்டு உள்ளிட்ட சில பத்திரிகைகள் வெளியாயின. இந்நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ.90 கோடி கடன் கொடுத்துள்ளது. இதை திருப்பிச் செலுத்தாத நிலையில், நஷ்டம் காரணமாக 2008-ல் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, 2010-ம் ஆண்டு இந்நிறுவனத்தின் பங்குகள் வெறும் ரூ.50 லட்சத்துக்கு யங்இந்தியா நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது. இதற்கு ஏஜேஎல் நிறுவன பங்குதாரர்களின் ஒப்புதலைப் பெறவில்லை.

இந்நிறுவனத்தின் 76 சதவீத பங்குகள் காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் ஆகியோர் வசமும் 24 சதவீத பங்குகள் மோதிலால் வோரா, ஆஸ்கர் பெர்னாண்டஸ் உள்ளிட்டோர் வசமும் வந்தன. 2016 முதல் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை மீண்டும் வெளியாகிறது.

இதனிடையே, ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஏஜேஎல் நிறுவனத்தின் பங்குகளை மாற்றிய தில் முறைகேடு நடந்ததாகக் கூறி டெல்லி நீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடுத்தார். இந்நிலையில் இந்த வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

ராகுல்காந்தியிடம் கடந்த 13, 14, 15, 20 மற்றும் 21-ந்தேதிகளில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. ராகுல் காந்தியிடம் மொத்தம் 60 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ளது. காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி 23 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

ஆனால் கரோனா பாதிப்பால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால் ஆஜராக வில்லை. பின்னர் ஜூலை மாதமும் அவர் கூடுதல் அவகாசம் கோரியிருந்தார். விசாரணைக்கு ஆஜர் ஆவதை சில வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று அமலாக்கத்துறைக்கு சோனியா காந்தி கடிதம் எழுதினார்.

இந்தநிலையில் ஜூலை 21ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு கூடுதல் அவகாசம் கேட்டு அமலாக்கதுறை இயக்குநரகம் புதிய சம்மன் அனுப்பியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x