Published : 11 Jul 2022 04:20 PM
Last Updated : 11 Jul 2022 04:20 PM
புதுடெல்லி: கிராமப்புறப் பெண்களுக்கு உதவி செய்ய டெல்லி அரசு தேஜஸ்வினி எனும் பெயரில் ஒரு திட்டம் அமலாக்கியது. இக்குழுவின் 52 பெண் போலீஸார் ஓர் ஆண்டில் 100 குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.
பெண்கள் பாதுகாப்பு தொடர்பான திட்டமாக டெல்லி காவல்துறை சார்பில் 'தேஜஸ்வினி' அமலாக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் பெண் போலீஸார் மட்டும் உறுப்பினராக அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஸ்கூட்டி, பைக் உள்ளிட்ட இருசக்கர வாகனங்கள் பணிக்காக அளிக்கப்பட்டுள்ளது. இதில் சென்று பெண் போலீஸார் டெல்லியின் கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களின் பெண்களுக்கு உதவுகின்றனர்.
குறிப்பாக, அப்பெண்களுக்கு சைபர் க்ரைம்களிலிருந்து தப்புவது எப்படி என விழிப்புணர்வைத் தருகின்றனர். இதனால், பல்வேறு குற்றச் செயல்களில் பாதிக்கப்படாமல் அப்பெண்கள் தப்பி உள்ளனர்.
இத்துடன், அப்பெண்கள் மீது குற்றச்செயல்கள் புரிந்த சுமார் 100 குற்றவாளிகளையும் கைது செய்துள்ளனர். இவர்களில் பாலியல் குற்றவாளிகள், திருடர்கள், வழிப்பறி, வாகனங்கள் திருடுபவர்கள் மற்றும் கொள்ளை அடிப்பவர்கள் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
இது குறித்து டெல்லி வடமேற்கு மாவட்ட மாநகரக் காவல்துறையின் துணை ஆணையரான உஷா ரங்கானி கூறும்போது, ''தேஜஸ்வினி திட்டம் கடந்த வருடம் ஜூலை 11-இல் தொடங்கப்பட்டது. இதன் நோக்கம் சைபர் க்ரைம் பற்றி அறியாத பெண்களுக்கு அதன் மீதான விழிப்புணர்வை அளிப்பது ஆகும். இக்குழுவினர் ஆண் போலீஸாரை போல் தம் இருசக்கர வாகனங்களில் ரோந்து செல்கிறார்கள்.
இத்துடன் அதிக விழிப்புணர்வு இல்லாமல் வாழும் இளம்பெண்களை தேர்வு செய்து அவர்களுக்கு சைபர் க்ரைம் மற்றும் தற்காப்புப் பயிற்சிகளும் அளிக்கிறார்கள். இக்குழுவால் கடந்த ஒரு வருடத்தில் 100-க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் கைதாக இருப்பது சாதனை'' எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT