Published : 07 Jul 2022 04:06 PM
Last Updated : 07 Jul 2022 04:06 PM
பாட்னா: "மாணவர்கள் வகுப்புக்கு வரவில்லை. பாடம் நடத்தாமல் சம்பளம் பெற மனசாட்சி உறுத்துகிறது" எனக் கூறி ரூ.23 லட்சம் சம்பளப் பணத்தை கல்லூரியின் பேரில் காசோலை எழுதிக் கொடுத்துள்ளார் பேராசிரியர் ஒருவர்.
பிஆர் அம்பேத்கர் பிஹார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரி முசாஃபர்பூர் மாவட்டத்தில் உள்ள நிதிஷேஸ்வர் கல்லூரி. 1970 ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்ட வீரர் நிதிஷேஸ்வர் பிரசாத் சிங் நினைவாக நிதிஷேஸ்வர் கல்லூரி தோற்றுவிக்கப்பட்டது. இது 1976 ஆம் ஆண்டு முதல் பிஆர் அம்பேத்கர் பிஹார் பல்கலையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இங்கே 3000 மாணவர்கள் பயில்கின்றனர். இக்கல்லூரியில் 31 நிரந்தரப் பேராசிரியர்கள் உள்ளனர். இந்தக் கல்லூரியின் இந்தி துறையின் உதவிப் பேராசிரியர் லல்லன் குமார். இவர் கடந்த 2019 செப்டம்பரில் இக்கல்லூரியில் பணியில் சேர்ந்துள்ளார்.
ஜூலை 2022 உடன் இவர் பணியில் சேர்ந்து 33 மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் இந்தக் காலகட்டத்தில் இவரின் வகுப்புக்கு ஒரே ஒரு மாணவர் கூட வரவில்லையாம். இதனால் அவர் இதுவரை ஊதியமாகப் பெற்ற ரூ.23 லட்சத்து 82 ஆயிரத்து 228 ரூபாயை திருப்பிக் கொடுத்துள்ளார். பிஆர் அம்பேத்கர் பிஹார் பல்கலைக்கழகத்தின் பதிவாளருக்கு அவர் காசோலையை அனுப்பிவைத்தார். ஜூலை 5ஆம் தேதியன்று அவர் காசோலையை அனுப்பியுள்ளார்.
விளக்கம் கோரிய பல்கலைக்கழகம்: இது குறித்து பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தாக்கூர் கூறுகையில், "லல்லன் குமாரின் செயல் வியக்கவைக்கிறது. ஆகையால் நாங்கள் உடனடியாக நடவடிக்கையை தொடங்கியுள்ளோம். இது குறித்து துணை வேந்தரிடம் ஆலோசிக்கவுள்ளோம். மேலும், கல்லூரி முதல்வரிடமும் மாணவர்கள் வருகை தராதது குறித்து விளக்கம் கோரியுள்ளோம்" என்றார்.
மனசாட்சி உறுத்துகிறது: லல்லன் குமார், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இருந்து இந்தியில் முதுகலை பட்டம் பெற்றார். டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்.ஃபில் மற்றும் முனைவர் பட்டம் பெற்றார். இந்நிலையில் தான் அவருக்கு பணியும் கிடைத்துள்ளது. ஆனால் மாணவர்கள் வகுப்புக்கு வராததால் லல்லன் குமார் விரக்தியடைந்துள்ளார். முதுகலை துறைக்காவது மாற்றுங்கள் என்று அவர் கோரியுள்ளார். ஆனால் அதுவும் நடக்கவில்லை.
இதனால்தான் அவர் சம்பளத்தைத் திருப்பிக் கொடுத்துள்ளார். அதற்கான விளக்கத்தில், "நான், எனது மனசாட்சியின் குரலைக் கேட்டேன். அதனால் வகுப்பே நடத்தாமல் பெற்ற ஊதியத்தை திரும்பி அளிக்கிறேன். 2 ஆண்டுகள் 9 மாதங்களுக்கான சம்பளத்தை திருப்பியளித்துள்ளேன். ஆன்லைன் வகுப்புகளில் கூட சொற்பமான அளவே மாணவர்கள் வந்தனர். தொடர்ந்து 5 ஆண்டுகள் நான் மாணவர்களுக்கு பாடம் எடுக்காமல் இருந்தால் கல்விப்பணி ரீதியாக நான் உயிரிழந்ததற்கு சமம்" என்று கூறியுள்ளார்..
கல்லூரி முதல்வர் விளக்கம்: லல்லன் குமாரின் செயல் குறித்து கல்லூரி முதல்வர் மனோஜ் குமார் கூறுகையில், "லல்லன் சேர்ந்ததில் இருந்து கரோனா காலம். ஆன்லைன் வகுப்புக்களே பெரும்பாலும் நடந்தன. இப்போதுதான் நிலைமை சீராகிக் கொண்டிருக்கிறது" என்றார். ஆனால் மாணவர்கள் வகுப்பைப் புறக்கணித்தது ஏன் என்பதற்கு அவர் தெளிவான விளக்கம் ஏதும் கொடுக்கவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT