Published : 07 Jul 2022 06:05 AM
Last Updated : 07 Jul 2022 06:05 AM

போர் விமானத்தில் ஒரே நேரத்தில் பறந்து தந்தை, மகள் சாதனை

மகள் அனன்யா சர்மாவுடன் ஏர் கமோடர் சஞ்சய் சர்மா.

பீதர்: தந்தையும், மகளும் சேர்ந்து போர் விமானத்தில் ஒரே நேரத்தில் பறந்து புதிய சாதனை படைத்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் பீதரில் உள்ள இந்திய விமானப்படை நிலையத்தில் பணியாற்றுபவர் ஏர் கமோடர் சஞ்சய் சர்மா. இவரது மகள் அனன்யா சர்மாவும் விமானப் படையில் உள்ளார். இவர் ‘பிளையிங்' அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் பீதரில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து ஹாக்-132 ரக போர் விமானங்களில் இருவரும் ஒரே நேரத்தில் பறந்தனர். இதுவரை இந்தியாவில் எந்தவொரு தந்தையும், மகளும் ஒன்றாய் போர் விமானத்தில் பறந்தது கிடையாது. இருவரும் விமானங்களில் அணிவகுப்பை ஏற்படுத்தி பறந்துள்ளனர்.

எனவே, இது புதிய வரலாற்று சாதனையாக பதிவாகியுள்ளது. அடுத்தடுத்த போர் விமானங்களில் பறந்து இந்த சாதனையை சஞ்சய் சர்மாவும், அனன்யா சர்மாவும் செய்துள்ளனர்.

தந்தை விமானப்படை அதிகாரியாக இருப்பதைப் பார்த்து அனன்யாவுக்கும் இளம் வயதிலேயே விமானப்படையில் சேர வேண்டும் என்ற கனவு வந்துவிட்டது. மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியலில் பி.டெக். பட்டம் பெற்ற அனன்யா, 2016-ம் ஆண்டு இந்திய விமானப்படையில் சேர்ந்தார். இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பரில் இவர் போர் விமானியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

இதுகுறித்து பீதரில் உள்ள விமானப்படைத் தளத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “விமானப்படை அதிகாரி அனன்யா சர்மா தற்போது இங்கு பயிற்சியில் உள்ளார். அதிநவீன போர் விமானங்களை இயக்குவதற்காக இங்கு அவருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தந்தை சஞ்சய், மகள் அனன்யா இருவரும் தந்தை, மகள் போலவே பழகுவதில்லை. இருவருமே போர்ப்படை வீரர்களாகவே தங்களை பாவித்து ஒரே நேரத்தில் போர் விமானத்தில் சென்றனர்” என்றார்.

ஏர் கமோடர் சஞ்சய் சர்மா 1989-ல் இந்திய விமானப் படையில் சேர்ந்தார். மிக்-21 உள்ளிட்ட பல்வேறு போர் விமானங்களை இயக்கிய அனுபவம் படைத்தவர் சஞ்சய்.

2016-ம் ஆண்டில்தான் இந்திய விமானப் படையில் பெண் போர் விமானிகள் சேர்க்கப்பட்டனர். அப்போது சேர்க்கப்பட்ட 3 பெண் விமானிகளுள் அனன்யாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x