Published : 06 Jul 2022 09:35 PM
Last Updated : 06 Jul 2022 09:35 PM

மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி ராஜினாமா - குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு?

புதுடெல்லி: மத்திய அமைச்சர்கள் முக்தர் அப்பாஸ் நக்வி மற்றும் ஆர்சிபி சிங் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். தங்கள் ராஜ்யசபா எம்பி பதவிக்காலம் முடிவதற்கு ஒரு நாள் முன்னதாக இருவரும் இன்று ராஜினாமா செய்துள்ளனர்.

இருவரது ராஜினாமாவையும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டுள்ளார். முன்னதாக, இருவரும் தங்களின் கடைசி அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றனர். அப்போது இருவரின் சேவையையும் பிரதமர் மோடி பாராட்டினார். முக்தர் அப்பாஸ் நக்வி, பிரதமர் மோடியின் அமைச்சரவையில் சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார். அதேபோல், ஆர்சிபி சிங் எஃகுத்துறை அமைச்சராக இருந்தார்.

அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான பாஜக அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த இருவர் பிரதமர் மோடி அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ளனர். அதில் ஒருவர் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். மற்றொருவர் முக்தர் அப்பாஸ் நக்வி. 64 வயதாகும் அவர் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படலாம் என்று யூகங்கள் கிளம்பியுள்ளன. நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவியான குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு சிறுபான்மை சமூகத்தின் பிரதிநிதியை கொண்டுவர ஆளும் பாஜக தரப்பு ஆலோசித்து வருவதாக கடந்த சில வாரங்களாகவே தகவல்கள் வெளிவந்தன.

அதன்தொடர்ச்சியாக, முக்தர் அப்பாஸ் நக்வி குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக, நுபுர் சர்மாவின் முகமது நபி குறித்த கருத்துக்களால் பாஜக பல விமர்சனங்களை எதிர்கொண்டுவருகிறது. இதுபோன்ற விமர்சனங்களை எதிர்கொள்ளும் வகையில் முக்தர் அப்பாஸ் நக்விக்கு குடியரசு துணைத் தலைவர் பதவி கொடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக வடஇந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

இதனிடையே, முக்தர் அப்பாஸ் நக்வி வகித்து வந்த சிறுபான்மையினர் நலத்துறை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x