Published : 06 Jul 2022 05:52 PM
Last Updated : 06 Jul 2022 05:52 PM
சண்டிகர்: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு நாளை (வியாழக்கிழமை) திருமணம் நடைபெறவுள்ளது. எளிமையாக நடைபெறும் இந்தத் திருமண விழாவில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர்.
பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. இதனையடுத்து பகவந்த் மான் முதல்வர் பொறுப்பேற்றார்.
48 வயதாகும் பகவந்த் மான் பஞ்சாப்பின் சங்ரூர் மாவட்டத்தின் சடோஜ் கிராமத்தில் பிறந்தவர். பஞ்சாப் மக்கள் மத்தியில் ஓர் அரசியல்வாதி என்பதை விட, காமெடி நடிகராக அறியப்படுகிறார் பகவந்த். தனது கல்லூரி பருவத்தில் இருந்தே ஸ்டாண்ட் அப் காமெடியனாக தன்னை மேம்படுத்தி கொண்ட பகவந்த், நிறைய கல்லூரி நிகழ்வுகளில் காமெடி ஷோக்களில் பங்கேற்றுள்ளார்.
நாளைடைவில் அதுவே அவரை டெலிவிஷன் நிகழ்ச்சிகள் வரை கொண்டு சென்றது. பகவந்த்தின் தனிச் சிறப்பு அவரின் அரசியல் நையாண்டி. பஞ்சாப் மற்றும் தேசிய அரசியலின் நடப்பு நிகழ்வுகளை காமெடி கன்டென்ட்டாக மாற்றி மக்கள் முன்னிலையில் நடித்து காண்பிப்பார்.
இந்த பாணி அவரை மக்கள் மத்தியில் வெகுவாக கொண்டு சேர்த்தது. சில பட வாய்ப்புகளையும் பெற்றுக்கொடுத்தது. இப்படி புகழ்பெற்ற நகைச்சுவை நடிகராக இருந்தாலும், அரசியல் என்ட்ரி கொடுத்த பிறகு அவர் காமெடியன் பட்டத்தை துறந்து முழு நேர அரசியல்வாதியாக மாறினார்.
இந்நிலையில், முதல்வர் பகவந்த் மான் நாளை குர்ப்ரீத் கவுர் என்ற பெண்மணியை திருமணம் செய்யவிருக்கிறார். ஆம் ஆத்மி தலைவரும், செய்தித் தொடர்பாளருமான மல்வீந்தர் சிங் காங் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
6 ஆண்டுகளுக்கு முன்னர் பகவந்த் மான் தனது மனைவியை விவாகரத்து செய்தார். பகவந்த் மானுக்கு முதல் திருமணம் வாயிலாக இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்கள் தமது தாயுடன் அமெரிக்காவில் வசிக்கின்றனர். மே மாதம் நடந்த பகவந்த் மான் பதவியேற்பு விழாவில் குழந்தைகள் இருவரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் (48) நாளை குர்ப்ரீத் கவுரை கரம்பிடிக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment