Published : 05 Jul 2022 10:44 PM
Last Updated : 05 Jul 2022 10:44 PM

பசிபிக் பகுதியில் நடக்கும் 'ரிம்பாக் ஒத்திகை' - இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சாத்புரா, பி-8ஐ பங்கேற்பு

'ரிம்பாக் ஒத்திகை'யில் பங்கேற்பதற்க சென்றுள்ள பி-8ஐ எல்ஆர்எம்ஆர்ஏஎஸ்டபிள்யூ விமானமும் வீரர்களும்

புதுடெல்லி: உலகின் மிகப்பெரிய கடற்படை ஒத்திகையான 'ரிம்பாக் ஒத்திகை'யில் பங்கேற்பதற்காக இந்தியாவின் ஐஎன்எஸ் சாத்புரா போர்கப்பலும், பி-8ஐ எல்ஆர்எம்ஆர்ஏஎஸ்டபிள்யூ விமானமும் ஹவாய்த் தீவிற்கு சென்றுள்ளன.

பசிபிக் வளைய போர்ப்பயிற்சி ஒத்திகையான ரிம்பாக் (RIMPAC) நிகழ்வில் பங்கேற்பதற்காக, முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைத்துத் தயாரிக்கப்பட்ட இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சாத்புரா போர்க்கப்பலும், பி-8ஐ எல்ஆர்எம்ஆர்ஏஎஸ்டபிள்யூ விமானமும், ஹவாய் தீவின் பேர்ல் ஹார்பர் துறைமுகத்திற்கு சென்றுள்ளன.

இதில், சாத்புரா கப்பல் ஜூன் 27-ம் தேதி ஹவாயைச் சென்றடைந்த நிலையில், பி-8ஐ விமானம் ஜூலை 2-ம் தேதி ஹவாயைச் சென்றடைந்தது. துறைமுக வளாகத்தில் நடைபெறும் இந்த ஒத்திகையின் ஒரு பகுதியாக, கருத்தரங்குகள், விவாதங்கள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த ஒத்திகையில் பங்கேற்றுள்ள கடற்படை வீரர்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க அருங்காட்சியக கப்பலான யுஎஸ்எஸ் மிசோரியை பார்வையிட்டனர். தொடர்ந்து யுஎஸ்எஸ் அரிசோனா நினைவிடத்தில், இரண்டாம் உலகப் போரின் போது உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

ஐஎன்எஸ் சாத்புரா போர் கப்பல்

ஆறுவார காலம் நடைபெறும் இந்தப் போர் பயிற்சியில் ஐஎன்எஸ் சாத்புரா மற்றும் ஒரு பி-8ஐ கடலோர ரோந்து விமானமும் பங்கேற்றுள்ளன. நட்பு நாட்டு கடற்படைகளிடையே, செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தும் நோக்கில், இந்தப் போர்ப்பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 28 நாடுகளைச் சேர்ந்த 38 போர்க் கப்பல்கள், 9 நாடுகளின் தரைப்படையினர், 31 ஆளில்லா சாதனங்கள், 170 விமானங்கள் மற்றும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் இந்த ஒத்திகையில் பங்கேற்றுள்னனர்.

இந்தக் கடல் ஒத்திகை ஜூலை 12- ம் தேதி தொடங்குகிறது. ஆகஸ்டு 4-ம் தேதி பயிற்சியின் நிறைவு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x