Published : 05 Jul 2022 05:34 AM
Last Updated : 05 Jul 2022 05:34 AM
புதுடெல்லி: ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்டாரென்ட்கள் சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று நுகர்வோரிடம் கட்டாயப்படுத்தக் கூடாது என மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) உத்தரவு பிறப்பித்துள்ளது.
உணவு கட்டணத்துடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சேவைக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேவைக் கட்டணம் அளிக்க வேண்டும் என்பது வாடிக்கையாளர் விருப்பத்துக்கு உட்பட்டதாகும். அதை நுகர்வோரின் முடிவுக்கு விட்டுவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் ஆர்டர் செய்த உணவுடன் எந்த பெயரிலும் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படக் கூடாது என்றும் சிசிபிஏ தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
இவ்விதம் வசூலிக்கப்பட்டால் வாடிக்கையாளர்கள் தேசிய நுகர்வோர் சேவை தொலைபேசி எண் 1915-ல் தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரென்ட் குறித்து புகார் அளிக்கலாம்.
இதற்கு முன்பு 2017-ம் ஆண்டில் இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி அளிக்கப்படும் பில்லில் சேவைக் கட்டணத்துக்கான இடம் ஒதுக்கப்பட்டிருக்கலாம். இந்தப் பகுதியில் எந்தக் கட்டணமும் இடம்பெறக் கூடாது. அதை வாடிக்கையாளர் விரும்பினால் நிரப்பி அளிக்கலாம்.
இதுபோன்று சேவைக் கட்டணம் விதிப்பதற்கு சட்ட ரீதியில் எவ்வித அனுமதியும் அளிக்கப்படவில்லை என்று ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரென்ட் பிரதிநிதிகளிடம் நிதி அமைச்சகம் ஏற்கெனவே தெளிவாக தெரிவித்துவிட்டது.
பெரும்பாலும் நுகர்வோர்கள் சேவை வரியையும். சேவைக் கட்டணத்தையும் ஒன்றாக நினைத்து செலுத்தி விடுகின்றனர். இப்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் உணவகங்கள் மற்றும் ரெஸ்டாரென்டில் நுழைந்தாலே அவர்களிடம் சேவைக் கட்டணம் வசூலிக்கலாம் என்ற போக்கு தவறானது. நுகர்வோர் பாதுகாப்பு சட்ட விதி 2019-ன்படி இவ்விதம் வசூலிப்பது முறையற்ற வணிக நடைமுறை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதை நிதி அமைச்சகம் சுட்டிக் காட்டியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT