Published : 04 Jul 2022 01:49 PM
Last Updated : 04 Jul 2022 01:49 PM
மும்பை: மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு, சட்டப்பேரவையில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 164 வாக்குகள் பெற்று எளிதில் வெற்றி பெற்றது. நேற்று நடந்த சபாநாயகர் தேர்தலில் எதிரணிக்கு 104 வாக்குகள் கிடைத்த நிலையில் இன்று அது 99 ஆக குறைந்தது. 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இன்று வாக்கெடுப்பு முடிந்த பிறகு காலதாமதமாக சபைக்கு வந்தனர்.
மகாராஷ்டிராவில் பல்வேறு திருப்பங்களுக்கு பிறகு சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு கடந்த 29-ம் தேதி கவிழ்ந்தது. இதையடுத்து, பாஜக, சிவசேனா அதிருப்தி அணி இணைந்து கடந்த 30-ம் தேதி மாநிலத்தில் புதிய அரசை அமைத்தன. சிவசேனா அதிருப்தி அணி தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும் பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.
இதைத் தொடர்ந்து பேரவையில் 4-ம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆளுநர் உத்தரவிட்டார். அதன்படி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்காக சட்டப்பேரவையின் 2 நாள் சிறப்பு கூட்டம் நேற்று தொடங்கியது.
பேரவைத் தலைவர் தேர்வு நடந்தது. இதில் பாஜக எம்எல்ஏ ராகுல் நர்வேகர் 164 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்ட ராஜன் சால்விக்கு 107 வாக்குகள் கிடைத்தன. இவரது மாமனார் ராம்ராஜே நாயக், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்ட மேலவை தலைவராக உள்ளார். சமாஜ்வாடியின் 2 எம்எல்ஏக்களும், அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் எம்எல்ஏ ஒருவரும் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
மகாராஷ்டிர சட்டப்பேரவையின் பலம் 288 ஆகும். சிவசேனா எம்எல்ஏ ரமேஷ் அண்மையில் உயிரிழந்தார். இதன்காரணமாக பேரவையில் தற்போது 287 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர்.
இதில் தேசியவாத காங்கிரஸை சேர்ந்த அனில் தேஷ்முக், நவாப் மாலிக் ஆகியோர் ஊழல் வழக்குகளில் சிக்கி சிறையில் உள்ளனர். அந்த கட்சியை சேர்ந்த தத்தாத்ரே பரணி, அன்னா போன்சடே, நிலேஷ்லங்கி, பாபன்தாதா ஷிண்டே, திலீப்ஆகியோர் நேற்று சட்டப்பேரவைக்கு வரவில்லை.
காங்கிரஸை சேர்ந்த பிரணதி ஷிண்டே, ரஞ்சித் காம்ப்ளே மற்றும் மஜ்லிஸ் கட்சி எம்எல்ஏ முப்தி முகமது ஆகியோரும் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. பாஜகவைச் சேர்ந்த முக்தா திலக், லட்சுமண் ஜெகதாப் ஆகியோர் மிக தீவிர உடல் நலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களும் பேரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. ஒட்டுமொத்தமாக 12 எம்எல்ஏக்கள் நேற்று பேரவைக்கு வரவில்லை.
இன்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. ஆளும் பாஜக கூட்டணிக்கு 164 வாக்குகள் கிடைத்தன. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற 144 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் ஷிண்டே தலைமையிலான அரசு 164 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. எதிர்த்து 99 எம்எல்ஏக்கள் மட்டுமே வாக்களித்தனர். அதாவது எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு நேற்று 107 வாக்குகள் கிடைத்த நிலையில் இன்று அது 99 ஆக குறைந்து விட்டது.
முக்கியமாக மகாராஷ்டிர காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அசோக் சவான் மற்றும் விஜய் வாடெட்டிவார் ஆகிய இருவரும் இன்று ஷிண்டே அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்த பிறகு காலதாமதமாக சட்டப்பேரவைக்கு வந்தனர்.
நேற்று வாக்கெடுப்பின்போது வராமல் இருந்த காங்கிரஸ் எம்எல்ஏ ஜீஷன் சித்திக், மற்றொரு காங்கிரஸ் எம்எல்ஏ தீரஜ் தேஷ்முக் மற்றும் தேசியவாத காங்கிரஸின் சங்ராம் ஜக்தாப் ஆகியோரும் இன்றும் வரவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT