Published : 03 Jul 2022 05:00 AM
Last Updated : 03 Jul 2022 05:00 AM

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் சஞ்சய் ராவத்திடம் 10 மணி நேரம் விசாரணை

சஞ்சய் ராவத்

புதுடெல்லி: மகாராஷ்டிராவில் ரூ.1,034 கோடி மதிப்பிலான நிலம் கைமாறியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் ராவத்துக்கு சொந்தமான சில சொத்துகள் கடந்த ஏப்ரல் மாதம் முடக்கப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத் துறையின் மும்பை பிரிவு சஞ்சய் ராவத்துக்கு சம்மன் அனுப்பி இருந்தது.

இதன்படி தெற்கு மும்பையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் சஞ்சய் ராவத் நேற்று முன்தினம் காலை 11.30-க்கு ஆஜரானார். இதையடுத்து, அப்பகுதியில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

பின்னர் இரவு 10 மணி அளவில் அவர் அலுவலகத்திலிருந்து வெளியே வந்தார். அப்போது சஞ்சய் ராவத் கூறும்போது, “நம் மீது ஏதேனும் சந்தேகம் இருந்து அதுபற்றி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பினால் அதை மதிக்க வேண்டியது நமது கடமை. அப்போதுதான் நம் மீது பொதுமக்களுக்கு எந்த சந்தேகமும் வராது. அந்த வகையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் முன்பு ஆஜரானேன். சுமார் 10 மணி நேரம் என்னிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது முழு ஒத்துழைப்பு அளித்தேன்” என்றார்.

மும்பை மாநகராட்சி குறி

இந்த சூழலில் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் மும்பையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

ஏக்நாத் ஷிண்டே சிவசேனா முதல்வர் கிடையாது என்பதை உத்தவ் தாக்கரே ஏற்கெனவே தெளிவுபடுத்தி உள்ளார். இந்த ஆண்டு இறுதியில் மும்பை மாநகராட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மும்பை மாநகராட்சியை கைப்பற்ற பாஜக திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாகவே ஷிண்டேவை முதல்வராக்கி உள்ளனர். பாஜகவின் திட்டம் வெற்றி பெறாது.

அதிருப்தி அணியில் இணைய எனக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. நான் பால் தாக்கரேவின் உண்மையான தொண்டன். சிவசேனாவில் தொடர்ந்து நீடிப்பேன். காங்கிரஸ் கட்சி பலமுறை உடைந்திருக்கிறது. எனினும் அந்த கட்சி இன்றளவும் நிலைத்திருக்கிறது. இதேபோல சிவசேனாவும் நிலைத்திருக்கும்.

அரசியல் அழுத்தம் காரணமாக அமலாக்கத் துறை என் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக என்னிடம் 10 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு முழுஒத்துழைப்பு அளிக்க தயாராக உள்ளேன். நான் எந்த தவறும் செய்யவில்லை. அதனால் எனக்கு பயம் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கடந்த 1997 முதல் மும்பை மாநகராட்சி நிர்வாகம், சிவசேனா வசம் உள்ளது. எனினும் மும்பை மாநகராட்சி தேர்தலில் பாஜகவின் வெற்றி ஏறுமுகமாக இருந்து வருகிறது. மொத்தம் 227 கவுன்சிலர்கள் கொண்ட மும்பை மாநகராட்சியில் கடந்த 2007-ல் பாஜகவுக்கு 25 கவுன்சிலர்கள் மட்டுமே இருந்தனர். கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலில் பாஜகவின் பலம் 82 ஆக உயர்ந்தது. சிவசேனா 84 வார்டுகளை கைப்பற்றியது. தற்போது காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸின் ஆதரவுடன் மும்பை மாநகராட்சி சிவசேனா வசம் உள்ளது.

இந்த ஆண்டு இறுதியில் மும்பை மாநகராட்சி தேர்தல் நடக்கிறது. இப்போதைய சூழ்நிலையில் வரும் தேர்தலின்போது பாஜக, சிவசேனா இடையே கடும் போட்டி நிலவக்கூடும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x