Published : 03 Jul 2022 05:06 AM
Last Updated : 03 Jul 2022 05:06 AM
புதுடெல்லி: முஸ்லிம்களின் இறைத் தூதரை விமர்சித்த நுபுர் சர்மாவுக்கு எதிராக ராஜஸ்தானின் பூந்தி நகரில் ஜுன் 3-ம் தேதி முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பேசிய மவுலானா நதீம் அக்தர், ‘‘இறைத்தூதரை விமர்சித்த நுபுர் சர்மாவின் கண்களை தோண்டி எடுக்க வேண்டும்’’ என்பது உட்பட வன்முறையை தூண்டும் வகையில் பல்வேறு கருத்துகளை தெரிவித்தார்.
இதுகுறித்த புகாரின் அடிப்படையில் ஆலம் கோரி மட்டும் கைது செய்யப்பட்டார். தலைமறைவான நதீம் நேற்று கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், 2 நாட்களுக்கு முன்னர் அஜ்மீரில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக 4 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர்.
ஜுன் 28-ம் தேதி கன்னைய்யா லாலை அவரது தையல் கடையில் கொன்ற முகம்மது ரியாஸ் அத்தரியும், கவுஸ் முகம்மதுவும் என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதற்காக குற்றவாளிகளை அஜ்மீரில் இருந்து அழைத்துச் சென்று ஜெய்ப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
என்ஐஏ மறுப்பு
இந்த கொலையாளிகளின் பின்னணியில் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகள் சில இருப்பதாக செய்திகள் வெளியாகின. இதை என்ஐஏ மறுத்துள்ளது. ஆனால், ராஜஸ்தான் ஏடிஎஸ் படையினர், ரியாஸுக்கும், கவுஸுக்கும் பாகிஸ்தானின் தொடர்பு இருந்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கன்னைய்யா கொலையில் தொடர்புடையதாக மேலும் 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்களை ராஜஸ்தான் சித்தோர்கரில் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து ஜெய்ப்பூருக்கு அழைத்து சென்றனர். இந்த மூவரும், கன்னைய்யாவை கொலை செய்த பின் அங்கிருந்து தப்புவதற்கு ஏற்பாடு செய்தவர்கள் என்றும், சம்பவம் நடந்த அன்று 3 பேரும் கடைக்கு வெளியே காத்திருந்ததாகவும் சந்தேகிக்கப்படுகிறது. இந்த வழக்கில் நேற்றுமுன் தினம் இருவர் கைதாகி இருந்தனர். அவர்களையும் சேர்த்து கன்னைய்யா வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கூடுதல் எஸ்பி சஸ்பெண்ட்
இதனிடையே, கன்னைய்யா லால் புகார் அளித்த பின்பும் பாதுகாப்பு அளிக்கத் தவறிய விவகாரத்தில் விசாரணை நடைபெறுகிறது. முதல் கட்டமாக உதய்பூரின் கூடுதல் எஸ்.பி. அசோக் குமார் மீனா பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளார். கன்னைய்யா கொலை செய்யப்பட்டதற்கு பிறகு கூடுதல் பாதுகாப்புக்காக 10 மாவட்டங்களில் 32 போலீஸ் அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT