Published : 03 Jul 2022 04:39 AM
Last Updated : 03 Jul 2022 04:39 AM
புதுடெல்லி: செய்தியின் உண்மை தன்மையை சரிபார்க்கும் இணைய செய்தி நிறுவனமாக "ஆல்ட் நியூஸ்" செயல்படுகிறது. இதன் இணை நிறுவனர் முகமது ஜூபைர் இவரை, சமூக வலைதளங்களில் மத உணர்வுகளை அவமதிக்கும் வகையில் கருத்து, புகைப்படம் வெளியிட்டதற்காக டெல்லி போலீஸார் கடந்த மாதம் 27-ம் தேதி கைது செய்தனர். அவரை 4 நாட்கள் காவலில் விசாரிக்க டெல்லி நீதிமன்றம் கடந்த 28-ம் தேதி அனுமதி வழங்கியது.
இதன்படி முகமது ஜூபைரின் 4 நாட்கள் காவல் நிறைவடைந்து டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் முன்பு அவர் ஆஜர் செய்யப்பட்டார். அப்போது போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து முகமது ஜூபைருக்கு சட்டவிரோதமாக நிதியுதவி கிடைத்துள்ளது. அவரது கைதை கண்டித்து இந்த நாடுகளில் இருந்தே சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவாக கருத்துகள் வெளியிடப்படுகிறது.
தனது செல்போன், லேப் டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் இருந்து தகவல்களையும் முகமது ஜூபைர் அழித்துள்ளார். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT