Last Updated : 02 Jul, 2022 10:53 AM

 

Published : 02 Jul 2022 10:53 AM
Last Updated : 02 Jul 2022 10:53 AM

சம்பல் பள்ளத்தாக்கில் மீண்டும் தலைதூக்கும் கொள்ளைக்காரர்கள்: சாலை ஒப்பந்ததாரரிடம் பணம் கேட்டு மிரட்டல்

உள்படம்: கேசவ் குஜ்ஜார்

புதுடெல்லி: மத்தியப் பிரதேசத்தின் சம்பல் பள்ளத்தாக்கில் மீண்டும் கொள்ளைக்காரர்கள் தலைதூக்கும் நிலை உருவாகி உள்ளது. அங்குள்ள சாலைப்பணி ஒப்பந்ததாரரிடம் பணம் கேட்டு மிரட்டியதால், சாலை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

பூலன் தேவி தொடங்கிவைத்த கொள்ளை: மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் அமைந்துள்ளது சம்பல் பள்ளத்தாக்கு. இப்பகுதி, சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்புவரை கொள்ளைக்காரர்களின் பிடியில் சிக்கியிருந்தது. இங்குள்ள அரசியல்வாதிகளும் தேர்தல் சமயங்களில் சம்பலின் கொள்ளைக்காரர்களிடம் கையேந்தும் நிலை இருந்தது. இவர்களில் ஒருவராக இருந்த பூலன் தேவி சரணடைந்ததை அடுத்து சம்பல் கொள்ளைக்காரர்கள் கவனம் பெற்றனர்.சரணடைந்த பூலன் தேவி, சமாஜ்வாதி கட்சியில் இணைந்து உ.பி.யின் மிர்சாபூரிலும் மக்களவை எம்.பி.யாக இருந்தார். இவரை போல், மேலும் சில கொள்ளைக்காரர்களும் அவர்களது உறவினர்களும் கூட அரசியலில் ஈடுபட ஆர்வம் காட்டினர். இந்நிலையில், உ.பி.யின் அதிரடிப்படையினரால் சம்பலின் முக்கியக் கொள்ளைக்காரர்களான 'உபி வீரப்பன்' என்றழைக்கப்பட்ட நிருபய் குஜ்ஜர் உள்ளிட்ட பலரும் என்கவுண்டர் செய்யப்பட்டனர்.

மீண்டும் தலைதூக்குகிறதா? இதையடுத்து மூன்று மாநிலங்களிலும் சம்பல் கொள்ளைக்காரர்கள் ஓரிருவர் தவிர வெகுவாகக் குறைந்தனர். இவர்கள், எண்ணிக்கை தற்போது மீண்டும் அதிகரிக்கத் துவங்கி இருப்பதாகக் கருதப்படுகிறது. ம.பி.யின் மொரோனா மாவட்டத்தில் கேசவ் குஜ்ஜர் எனும் கொள்ளைக்காரன் ஆதிக்கம் அதிரிகத்துள்ளது. இதனால், கேசவின் தலைக்கு ம.பி. போலீஸாரால் ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கைலாரஸ் தாலூகாவின் நெப்ரி கிராமத்தில் ஆர்சிஎல் நிறுவனம் சார்பில் சாலை அமைக்கப்பட்டு வந்தது. இங்கு நேற்று முன்தினம் நள்ளிரவு சென்ற கேசவ் கொள்ளைக்காரர்களின் ஏழு பேர் கொண்ட கும்பல் பணம் கேட்டு மிரட்டினர்.

ஊழியர்களின் கைப்பேசிகளை பிடுங்கியவர்கள், தமக்கான பங்கை கொடுத்தால் தான் சாலை அமைக்க முடியும் எனவும் கூறி மிரட்டிச் சென்றுள்ளனர். இது குறித்து கைலாரஸ் காவல்நிலையத்தில் புகார் பதிவாகி உள்ளது. இதற்கு முன்பும் ஒருமுறை அருகிலுள்ள சின்னாவுனி காவல்நிலையப் பகுதியின் பெட்ரோல் பம்பில் கொள்ளைக்காரர்கள் மிரட்டியுள்ளனர். ஒரு மாதத்திற்கு முன்பாக நடைபெற்ற இந்த மிரட்டல் சம்பவத்தில் ரூ.2 லட்சம் கேசவ் குஜ்ஜர் கும்பலால் பறிக்கப்பட்டிருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x