Published : 01 Jul 2022 04:40 AM
Last Updated : 01 Jul 2022 04:40 AM
சென்னை: பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் மூலம் சிங்கப்பூர் நாட்டின் ‘டிஎஸ்-இஓ’ உள்ளிட்ட 3 செயற்கைக்கோள்கள் நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன.
விண்வெளி ஆய்வில் தனியார் துறைகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. இதற்காக 2019-ம் ஆண்டு என்எஸ்ஐஎல் என்ற அமைப்பும், 2020-ல் இன்ஸ்பேஸ் என்ற அமைப்பும் நிறுவப்பட்டன.
அதன்படி என்எஸ்ஐஎல் அமைப்பு மூலம் சிங்கப்பூருக்கு சொந்தமான டிஎஸ்-இஒ, நியூசர் உட்பட 3 செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் மூலம் வர்த்தக ரீதியாக விண்ணில் செலுத்த இஸ்ரோ முடிவு செய்தது. இந்த ஏவுதலுக்கான 25 மணி கவுன்ட்டவுன் நேற்று முன்தினம் தொடங்கியது. தொடர்ந்து ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி ராக்கெட் நேற்று மாலை 6.02 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
தரையில் இருந்து புறப்பட்ட 19 நிமிடங்களில் 3 செயற்கைக்கோள்களும் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன. இந்த ஏவுதலில் முதன்மைச் செயற்கைக்கோளான டிஎஸ்-இஓ 365 கிலோ எடை கொண்டது. இது ஒரே நேரத்தில் பல்வேறு கோணங்களில் பூமியை வண்ணப்படம் எடுக்கும் திறன் உடையது. மேலும், பேரிடர் மீட்புக்குத் தேவையான மனித வளங்களை கண்டறியும் பணிகளையும் மேற்கொள்ளும்.
இதுதவிர 155 கிலோ எடை கொண்ட நியூசர் செயற்கைக்கோள் சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார் தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடியது. இது இரவு, பகல் உட்பட அனைத்து பருவ நிலைகளிலும் துல்லியமாக படங்களை எடுத்து வழங்கும். இவ்விரண்டும் சிங்கப்பூருக்காக கொரியா குடியரசால் உருவாக்கப்பட்டவை. இதனுடன் கல்விசார் பணிக்காக சிங்கப்பூர் நான்யாங் தொழில்நுட்ப பல்கலை. மாணவர்கள் வடிவமைத்த ஸ்கூப்-1 என்ற செயற்கைக்கோளும் (2.8 கிலோ) விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் 1993-ம் ஆண்டு முதல் இதுவரை அமெரிக்கா உட்பட 34 வெளிநாடுகளை சேர்ந்த 345 செயற்கைக்கோள்கள் பிஎஸ்எல்வி மூலம் இஸ்ரோ வெற்றிகரமாக நிலைநிறுத்தியுள்ளது.
மேலும், இந்த ராக்கெட் ஏவுதலின்போது செயற்கைக்கோள்களை திட்டமிட்ட சுற்றுப் பாதையில் நிலைநிறுத்தப்பட்ட பின்னர், பிஎஸ்எல்வி ராக்கெட்டின் இறுதிப் பாகமான பிஎஸ் 4 இயந்திரம் உதவியுடன் சில ஆய்வு கருவிகள் பூமியைச் சுற்றி வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
பார்வையாளர்களுக்கு அனுமதி
2019-ம் ஆண்டு டிச.11-ம் தேதி பிஎஸ்எல்வி சி- 48 ராக்கெட் மூலம் ‘ரிசார்ட் 2பி ஆர்- 1’ செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் போது பொதுமக்கள் நேரடியாக பார்வையிட அனுமதி வழங்கப்பட்டது. அதற்குப் பின்னர் கரோனா பரவல் காரணமாக பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு பார்வையாளர்களுக்கு நேற்று அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ககன்யான், சந்திராயன்-3 ஏவுதல் எப்போது?
ககன்யான் மற்றும் சந்திராயன்-3 திட்டங்கள் குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத், நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிஎஸ்எல்வி சி-53 திட்டம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. வணிகரீதியாகவும், அதேநேரம் ராக்கெட் இறுதிப்பகுதி ஆய்வுக்காகவும் அனுப்பப்பட்டுள்ளன. அடுத்ததாக சிறிய ரக எஸ்எஸ்எல்வி ராக்கெட் திட்டம் ஜூலை இறுதிக்குள் செயல்படுத்தப்படும்.
இதையத்து ஜிஎஸ்எல்வி ராக்கெட்டை வணிகரீதியாக முன்னெடுக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக இந்திய ஆய்வுக்கான ஜிஎஸ்எல்வி, வணிகரீதியான ஜிஎஸ்எல்வி மார்க் 3 திட்டம் ஆகியவை செப்டம்பர், ஜனவரியில் செயல்படுத்தப்பட உள்ளன. இதுதவிர மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் ஆய்வு நிலையில் உள்ளது.
ராக்கெட்டில் ஆபத்து காலத்தில் வெளியேறுவதற்கான வசதிகளை அமைப்பது குறித்த பல்வேறு கட்ட ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல், சந்திராயன்- 3 திட்டமும் ஆய்வுப்பணியில் உள்ளது. ஏற்கெனவே நடைபெற்ற தவறுகள் மீண்டும் நடைபெறாதவாறு திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இதனால்தான் ககன்யான் மற்றும் சந்திராயன் திட்டங்கள் தாமதமாகின்றன. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக 2000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்தகட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT