Published : 30 Jun 2022 10:38 PM
Last Updated : 30 Jun 2022 10:38 PM
போபால்: சதாப்தி ரயிலில் பயணித்த பயணி ஒருவர் 70 ரூபாய் செலுத்தி தேநீர் பருகி உள்ளார். அதற்கான ரசீதை அவர் சமூக வலைதளத்திலும் பகிர்ந்துள்ளார். இந்த செய்தி தேநீர் பிரியர்களுக்கு கொஞ்சம் கசப்பாக இருக்கலாம். அதற்கான காரணம் என்ன என இந்திய ரயில்வே தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 28-ஆம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்த பயணி டெல்லி - போபால் தடத்தில் இயங்கும் சதாப்தி ரயிலில் பயணித்துள்ளார். காலை நேரம் எனபதால் கொஞ்சம் களைப்பாக இருந்த காரணத்தால் இளைப்பாறும் நோக்கில் அவர் தேநீர் ஆர்டர் செய்துள்ளார். அதற்கான விலையை பார்த்ததும் அவர் கொஞ்சம் அதிர்ந்து போயுள்ளார். அதில் தேநீரின் விலை ரூ.20 என்றும், சேவை கட்டணம் ரூ.50 எனவும், மொத்தமாக ரூ.70 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான கட்டணத்தை அவர் செலுத்தி உள்ளார்.
இருந்தும் அதனை ஜீரணித்துக் கொள்ள முடியாத அந்த பயணி, அதை அப்படியே சமூக வலைதளத்தில் பகிர்ந்து, தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். இது பகல் கொள்ளையாக இருக்கிறது எனவும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதற்கு ரயில்வே தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த 2018 ரயில்வே சார்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை இப்போது மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. ராஜ்தானி, சதாப்தி போன்ற ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் ரிசர்வேஷனின் போது உணவை முன்பதிவு செய்யவில்லை எனில் அதற்கு சேவை கட்டணம் ரூ.50 வசூலிக்கப்படும். அது தேநீர், காபி, உணவு என அனைத்திற்கும் பொருந்தும் என தெரிவித்துள்ளது ரயில்வே. மற்றபடி பயணியிடமிருந்து கூடுதல் கட்டணம் ஏதும் வசூல் செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT