Published : 30 Jun 2022 07:57 PM
Last Updated : 30 Jun 2022 07:57 PM
மும்பை: மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவி ஏற்றுக்கொண்டார். இதன் மூலம் அந்த மாநிலத்தின் 20-வது முதல்வராக அவர் அரியணை ஏறியுள்ளார். துணை முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றுக்கொண்டார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சியில் இருந்த சிவசேனா கட்சி தனது சொந்தக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களால் அதிருப்தியை எதிர்கொண்டு ஆட்சியை இழந்தது. புதிய முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக உத்தவ் தாக்கரேவை எதிர்த்து போர்க்கொடி தூக்கிய சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே முதல்வர் பதவி வசமாகியிருக்கிறது.
முன்னதாக, சிவசேனா கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 38 எம்எல்ஏக்கள், உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். அவர்கள் அசாம் மாநிலம் குவாஹாட்டியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்தனர். மகாராஷ்டிர சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கு கோர வேண்டும் என உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி உத்தரவிட்டார். இதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது.
இதையடுத்து, முதல்வர் பதவியிலிருந்து உத்தவ் தாக்கரே நேற்று இரவு விலகினார். பின்னர் தாக்கரே தானே ராஜ்பவனுக்கு காரில் சென்றார். அவரது மகன் ஆதித்யா தாக்கரே உடன் சென்றார். தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியிடம் நள்ளிரவில் சமர்ப்பித்தார். புதிய அரசு அமையும் வரை அவரை முதல்வராக தொடருமாறு ஆளுநர் கேட்டுக் கொண்டார்.
இதனையடுத்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் இரவில் கவுகாத்தியில் இருந்து கோவாவை அடைந்தனர். கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் பனாஜியில் உள்ள தாஜ் ஓட்டலுக்கு வந்து அவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அடுத்த கட்ட நடவடிக்கையை தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் ஏக்நாத் ஷிண்டே எடுப்பார்கள் என்று சந்திரகாந்த் பாட்டீல் அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக, அவர்கள் இருவரும் இன்று கூட்டாக ஆளுநர் கோஷியாரியை சந்தித்துப் பேசினர். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது மகாராஷ்டிரா புதிய முதல்வராக சிவசேனா கட்சியைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பார் என்று பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார். தாம் பதவி எதுவும் வகிக்கப் போவதில்லை என்று அவர் தெரிவித்தார்.
ஆனால், முன்னாள் முதல்வரான அவர் இப்போது அம்மாநிலத்தின் துணை முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டுள்ளார். கடந்த சில நாட்களாகவே அடுத்தடுத்து திருப்பங்கள் நிலவி வந்த மகாராஷ்டிர அரசியலில், துணை முதல்வர் பதவியேற்பும் ஒரு முக்கியத் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT