Published : 14 May 2016 12:42 PM
Last Updated : 14 May 2016 12:42 PM

தெலுங்கு தேசம் மாநாட்டுக்காக தேவஸ்தான விடுதிகள் முன்பதிவு: திருப்பதியில் பக்தர்கள் பாதிக்கப்படுவதாக புகார்

திருப்பதியில் நடைபெற உள்ள தெலுங்கு தேசம் கட்சி மாநாட்டுக்கு வருவோர் தங்குவதற்காக, தேவஸ்தான விடுதிகள் முன்பதிவு செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. விடுதிகளை கட்சிப் பிரமுகர்கள் ஆக்கிரமிப்பதால், சுவாமி தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாக நேரிடும் என்றும் சமூக ஆர்வலர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

ஆந்திராவில் ஆளும் கட்சியான தெலுங்கு தேச கட்சியின் மாநாடு வரும் 26, 27, 28 ஆகிய 3 நாட்கள் திருப்பதியில் உள்ள நேரு உயர்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.

அலிபிரி செல்லும் சாலையில் உள்ள இந்த சிறிய விளையாட்டு மைதானம் திருப்பதிக்கு வரும் விவிஐபிக்களின் ஹெலிகாப்டர் இறங்கும் தளமாக மட்டுமே பயன் படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது இந்த மைதானத்தில் சுமார் 30 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ள மாநாட்டை நடத்த முதல்வர் சந்திரபாபு நாயுடு தீர்மானித்துள்ளார். வாஸ்து படி இந்த இடத்தில் மாநாடு நடத்தினால் தொடர்ந்து மேலும் 10 ஆண்டுகளுக்கு சந்திரபாபு நாயுடுதான் முதல்வர் என சில ஜோதிடர்கள் சொன்னதை நம்பி இந்த இடத்தை முதல்வர் தேர்வு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த மாநாட்டில் பங்கேற்க ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் இருந்து தெலுங்கு தேச கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஆந்திர மாநில அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் வரவுள்ளனர். இவர்களுக்காக திருப்பதி தேவஸ்தான சத்திரங்களையும், விடுதிகளையும் முன் பதிவு செய்ய கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.

அதன்படி வரும் 25-ம் தேதி முதல் தொடர்ந்து 5 நாட்கள் வரை திருப்பதியில் உள்ள 3வது சத்திரம், விஷ்ணு நிவாசம், நிவாசம் உட்பட திருமலையில் உள்ள விடுதிகளையும் முன் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே முன் பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே இந்த நாட்களில் தங்கும் அறைகள் வழங்கப்பட உள்ளதால், முன் பதிவு செய்யாமல் வரும் பக்தர்கள் தங்கும் அறை கிடைக்காமல் அவதிக்குள்ளாக நேரிடும் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x