Published : 29 Jun 2022 10:56 PM
Last Updated : 29 Jun 2022 10:56 PM

'சிவசேனா தொண்டர்கள் ரத்தம் சிந்துவதை விரும்பவில்லை' - உத்தவ் தாக்கரே உருக்கமான பேச்சு

மும்பை: "எதிர்பாராத விதமாக அதிகாரத்துக்கு வந்தவன் நான். அதே பாணியில் இப்போதும் வெளியேறவும் செய்கிறேன்" என மகாராஷ்டிர முதல்வர் பதவியை ராஜினாமா செய்த உத்தவ் தாக்கரே பேசியுள்ளார்.

மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. இந்த தீர்ப்பு வெளியாகும் முன்பாக, மகாராஷ்டிரா முதல்வர் மாநில மக்களுக்கு சமூக வலைதளம் உரையாற்றினார். தனது உரையில், "இந்த தருணத்தில், என்னை ஆதரித்த என்சிபி மற்றும் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த சகாக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சரத் பவார் மற்றும் சோனியா காந்தி ஆகியோருக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். ஔரங்காபாத் மற்றும் உஸ்மானாபாத் என பெயர் மாற்றம் செய்யும் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை இன்று எடுத்தபோது, ​​மாநில அமைச்சரவையில் சிவசேனாவில் இருந்து அனில் பராப், சுபாஷ் தேசாய் மற்றும் ஆதித்யா தாக்கரே ஆகியோர் மட்டுமே என்னுடன் இருந்தனர்.

இந்த திட்டத்தை எதிர்ப்பதாக கூறப்பட்டவர்கள் காங்கிரஸும், தேசியவாத காங்கிரஸும்தான். ஆனால் அவர்கள் இன்று என்னுடன் இருக்கிறார்கள். ஒரு அரசாங்கமாக நான் செய்த முதல் வேலை ராய்காட் பாதுகாப்பிற்கு நிதி அளித்தது மற்றும் விவசாயிகளை கடனில் இருந்து விடுவித்தது. அதைவிட, எனது ஆட்சிக் காலத்தில் ஔரங்காபாத்தை சம்பாஜி நகர் என்றும், உஸ்மானாபாத்தை தாராஷிவ் என்றும் அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றியதில் நான் திருப்தி அடைகிறேன்.

ஆளுநருக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்ல விரும்புகிறேன். நம்பிக்கை வாக்கெடுப்புக்கு கடிதம் கொடுக்கப்பட்டவுடன் அவற்றை செயல்படுத்த ஆளுநர் முடிவு செய்தார். அதேநேரம், 12 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்ய முடிவெடுத்தால் ஆளுநர் மீதான மரியாதை மேலும் அதிகரிக்கும்.

தொழிலாளர்கள், சாமானியர்கள் சிவசேனா தலைவரால் வளர்க்கப்பட்ட மக்கள், இன்று இந்தநிலை உண்டானதுக்கு வருத்தப்படுகிறார்கள். என்னை பொறுத்தவரை அதிருப்தி எம்எல்ஏக்கள் சூரத் அல்லது குவாஹாட்டிக்கு செல்வதை விட வர்ஷா அல்லது மாடோஸ்ரீக்கு வந்திருக்க வேண்டும். நான் அவர்களின் உணர்வுகளை மதிக்கிறேன், ஆனால் அவர்கள் என்னிடம் வந்திருக்க வேண்டும். உண்மையான சிவசேனா தொண்டர்கள் (சிவ சைனிக்) சிலரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இங்கே உள்ள நிலைமையை சீர்குலைக்க மத்தியப் படைகள் மும்பைக்கு அனுப்பப்படுகின்றன. எல்லைப் படைகளையும் மும்பைக்கு அனுப்புவார்கள்.

அவற்றின் உதவியுடன் நாளை புதிய ஜனநாயகம் பிறக்கும். ஆனால், அவர்களின் வழியில் எந்த உண்மையான சிவசேனா தொண்டரும் செல்லமாட்டார். நான் பதவிக்காக கவலைப்படவில்லை. சிவசேனா தொண்டர்களின் ஆதரவில் நான் அக்கறை கொண்டுள்ளேன். முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன். நான் பயந்துவிடவில்லை. ஆனால், சிவசேனா தொண்டர்களின் ரத்தம் தெருக்களில் சிந்துவதை விரும்பாமல் பதவி விலகுகிறேன்.

எதிர்பாராத விதமாக அதிகாரத்துக்கு வந்தவன் நான். அதே பாணியில் இப்போதும் வெளியேறவும் செய்கிறேன். ஒரேயடியாக நான் செல்லவில்லை. இனி இங்கே தான் இருக்க போகிறேன். மீண்டும் சிவசேனா பவனில் அமர்வேன். மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டுவேன். நான் செய்த தவறு, இவர்கள் மீது (அதிருப்தி எம்எல்ஏக்கள்) நம்பிக்கை வைத்ததுதான்" என்று உருக்கமாக பேசினார்.

தொடர்ந்து உச்ச நீதிமன்ற உத்தரவு நடைமுறைப்படுத்துவது குறித்தும் அவர் பேசினார். "உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம். ஜனநாயகம் பின்பற்றப்பட வேண்டும்." என்றும் தெரிவித்தார். இதன்மூலம் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் என்பது உறுதியாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x