Published : 29 Jun 2022 06:35 PM
Last Updated : 29 Jun 2022 06:35 PM
புதுடெல்லி: மகாராஷ்டிர ஆளுநர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின்போது எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதிநீக்க நோட்டீஸ், நம்பிக்கை வாக்கெடுப்பை எப்படி பாதிக்கும் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு சொந்த கட்சியான சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இதனால் உத்தவ் அரசு கவிழும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் மகாராஷ்டிரா அரசியல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது.
சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் போர்க்கொடியால் சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை முதல்வர் உத்தவ் தாக்கரே நாளைக்குள் நிரூபிக்குமாறு மாநில ஆளுநர் பிஎஸ் கோஷியாரி உத்தரவிட்டுள்ளார். நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்குமாறு கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ஆளுநர் கோஷியாரி சட்டப்பேரவை செயலருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் ஆளும் கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லை என பல எம்எல்ஏக்களும் தனக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், பாஜக சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் தேவேந்திர பட்னவிஸ் தன்னை சந்தித்து புகார் தெரிவித்தாகவும் கூறியுள்ளார். அதனால் நாளை மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்குமாறும் அவர் கூறியுள்ளார்.
மகாராஷ்டிர ஆளுநர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 16 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது ஆளுநர் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆணை பிறப்பித்துள்ளது சட்டவிரோதமானது என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த மனு அவசர வழக்காக இன்று மாலை விசாரிக்கப்பட்டது. அப்போது சிவசேனா சார்பில் ஆஜரான அபிஷேக் மனு சிங்வி கூறுகையில் ‘‘நாளை நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடுவதில் ஆளுநர் சூப்பர்சோனிக் வேகத்தில் செயல்படுகிறார். 2 என்சிபி எம்எல்ஏக்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநாட்டில் உள்ளனர். இந்த சூழ்நிலையில் அவசர கதியில் ஏன் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். 34 எம்எல்ஏக்கள் பிரிந்து செல்லவில்லை.
நம்பிக்கை வாகெடுப்பில் யார் வாக்களிக்க முடியும், முடியாது என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது. மேலும் தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பி விட்டால் குறிப்பிட்ட நபரை சட்டப்பேரவை உறுப்பினராக கருத முடியாது. தகுதிநீக்க நோட்டீஸ் நிலுவையில் இருக்கும் போது அதிருப்தி எம்.எல்.ஏக்கள் எப்படி வாக்களிக்க முடியும்.
நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டுமென்றால் தகுதி நீக்க நடவடிக்கைக்கு அனுமதி தேவை. நாளைய தினம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றால் முதலில் அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட வேண்டும்’’ எனக் கூறினார்.
இதற்கு பதிலளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 34 எம்எல்ஏக்கள் பிரிந்து செல்லவில்லை என்று நீங்கள் மறுக்கிறீர்களா என கேள்வி எழுப்பியது. தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதிநீக்க நோட்டீஸ் நம்பிக்கை வாக்கெடுப்பை எப்படி பாதிக்கும் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். நிலுவையில் உள்ள தகுதி நீக்க நோட்டீஸ் வழக்கிற்கும் நம்பிக்கை வாக்கெடுப்புக்கும் என்ன சம்பந்தம் எனவும் கேள்வி எழுப்பி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT