Published : 28 Jun 2022 09:50 PM
Last Updated : 28 Jun 2022 09:50 PM
புதுடெல்லி: "மதத்தின் பெயரால் வன்முறையை அனுமதிக்க முடியாது" என்று ராஜஸ்தானின் உதய்பூர் கொலை சம்பவம் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களின் இறைத்தூதர் முகம்மது நபியை விமர்சித்த நுபுர் சர்மா பாஜகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். நுபுர் சர்மாவின் கருத்துக்கு ஆதரவளித்த உதய்பூரைச் சேர்ந்த கன்னைய்யா லால் டெலி (40), என்பவர் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இவர் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல்கடை வைத்து நடத்தி வந்தார். இன்று மாலை இவரது கடைக்குள் நுழைந்த இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் கன்னைய்யாவை கழுத்தை வெட்டி படுகொலை செய்தனர். இந்தநிலையில், கொலைக்கான காரணத்தை விளக்கி கொலையாளிகளான முகம்மது ரியாஸ் அன்சாரியும், முகம்மது கவுஸும் வெளியிட்ட வீடியோ பதற்றத்தை அதிகரித்துள்ளது.
காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துள்ள இந்த சம்பவத்தை அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வன்மையாகக் கண்டித்துள்ளார்.
இது குறித்து ராகுல் காந்தி கூறுகையில், "உதய்பூரின் கொடூரச் சம்பத்தால் நான் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளேன். மதத்தின் பெயரால் வன்முறையை ஏற்க முடியாது. இதுபோன்ற கொடூரங்களில் ஈடுபடுவோர் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். அனைவரும் ஒன்றாக இணைந்து வெறுப்புணர்வை தோல்வியுறச் செய்ய வேண்டும்.
இதன்மூலம், நான் கேட்டுக் கொள்வது என்னெவென்றால் அனைவரும் அமைதியையும், சகோதரத்துவத்தையும் காக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்
இந்தச் சம்பவத்தை கண்டித்து ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரும் ஹைதராபாத் எம்பியுமான அசாதுதீன் ஓவைசி கூறுகையில், "உதய்பூர் கொடூரக் கொலை கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற கொலை சம்பவத்தை யாரும் நியாயப்படுத்த முடியாது. எங்களது கட்சியின் கொள்கையின்படி சட்டத்தை எவரும் தம் கைகளில் எடுக்கக் கூடாது. இந்த சம்பவத்தின் குற்றவாளிகள் கைது செய்து கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். இதன் மூலம், நாட்டின் சட்டங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து உதய்பூரில் பதற்றம் நிலவுகிறது. அதனைக் கட்டுப்படுத்தும் விதமாக அந்த மாவட்டம் முழுவதிலும் இணையதள தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT