Published : 28 Jun 2022 08:09 PM
Last Updated : 28 Jun 2022 08:09 PM
புதுடெல்லி: நாடு முழுவதும் ஜூலை 1-ம் தேதி முதல் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களின் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு வைத்தல், விநியோகித்தல், விற்பனை மற்றும் அவைகளைப் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்படுகிறது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசு செய்து குறிப்பு: 'ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை 2022-ம் ஆண்டுக்குள் முற்றிலும் ஒழிக்கவேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பிற்கிணங்க, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவ நிலை மாற்றத் துறை, பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திருத்த விதிமுறைகள் 2021-ஐ , கடந்த ஆகஸ்ட் 12, 2021 அன்று அறிவித்தது.
சுதந்திர அமிர்த பெருவிழாவை மேலும் முன்னெடுத்துச் செல்லும் வகையில், குப்பையில் வீசப்படும் மற்றும் முறையாக கையாளப்படாத, பிளாஸ்டிக் கழிவுகளால் மாசு ஏற்படுவதை தடுக்க, இந்தியா முக்கியமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதன்படி, குறிப்பிட்ட சில ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு வைத்தல், விநியோகித்தல், விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு 1, ஜூலை, 2022 முதல் நாடு முழுவதும் தடை விதிக்கப்படுகிறது.
ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் குப்பைகளால் நிலப்பரப்பிலும், நீர் நிலைகளிலும், எதிர்மறை விளைவுகளை (பாதிப்பு) ஏற்படுவதோடு, உலகம் முழுவதும் ஆழ்கடல் பரப்பிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. கடந்த 2019-ல் நடைபெற்ற ஐ நா சபையின் 4-வது சுற்றுச்சூழல் மாநாட்டில், ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து உலக அளவில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இந்தியா முன்மொழிந்த தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மார்ச் 2022 - ல் நடைபெற்ற 5-வது ஐநா சுற்றுச்சூழல் மாநாட்டில், பிளாஸ்டிக் மாசுபாடு குறித்து உலக அளவில் நடவடிக்கை எடுக்கக்கோரி, அனைத்து உறுப்பு நாடுகளிடமும் ஒருமித்த கருத்தை ஏற்படுத்த இந்தியா ஆக்கப்பூர்வமாக பணியாற்றியது.
பிளாஸ்டிக் குச்சுகளுடன் கூடிய காது குடையும் பஞ்சு, பிளாஸ்டிக் குச்சுகளுடன் கூடிய பலூன்கள், பிளாஸ்டிக் கொடிகள், ஐஸ்கிரீம் குச்சுகள், அலங்காரத்திற்கான தெர்மோகோல், பிளாஸ்டிக் தட்டுகள், குவளைகள், பிளாஸ்டிக் கத்தி, ஸ்பூன், ஃபோர்க், உறிஞ்சுக் குழல், ட்ரே, மற்றும் ஸ்வீட் பாக்ஸ், அழைப்பிதழ் அட்டைகள், சிகரெட் பாக்கெட்கள், 100 மைக்ரானுக்கும் குறைவான பிளாஸ்டிக் அல்லது பிவிசி பேனர்கள் போன்றவை தடை செய்யப்பட்ட பொருட்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
தடை செய்யப்பட்டபொருட்களை சட்டத்திற்கு புறம்பாக தயாரித்தல், இறக்குமதி செய்தல், விநியோகித்தல், விற்பனை மற்றும் பயன்பாட்டை தடுக்க, தேசிய மற்றும் மாநில அளவிலான கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்படுவதுடன், மாநில எல்லைகளில் சோதனை சாவடிகளை அமைத்து தடை செய்யப்பட்ட பொருட்கள் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு எடுத்து செல்வதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
பிளாஸ்டிக் தடை பிரச்சினையில் அரசுக்கு உதவும் வகையில், மக்களுக்கு அதிகாரம் அளிக்க மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் குறைதீர்ப்பு செயலி ஒன்றை உருவாக்கியுள்ளது. இதுகுறித்து பொதுமக்களிடையே விளம்பரப்படுத்தும் வகையில், பிரக்ரித்தி என்ற இலட்சினை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, மத்திய, மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள், ஆராய்ச்சி அமைப்புகள், தொழில் நிறுவனங்கள், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து பணியாற்ற வேண்டும்' என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT