Published : 25 Jun 2022 06:43 AM
Last Updated : 25 Jun 2022 06:43 AM

கரோனா பரவலை கட்டுப்படுத்த கண்காணிப்பு - மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அறிவுறுத்தல்

புதுடெல்லி: கரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பு அவசியம் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஒமைக்ரான் வைரஸ் மற்றும் அதன் துணை வைரஸ்களால் தூண்டப்பட்ட கரோனா அலை மீண்டும் எழுச்சி பெற்றுவருகிறது. குறிப்பாக ஒமைக்ரான் மற்றும் அதன் துணை வைரஸ்களான பிஏ.2, பிஏ.2.38 ஆகியவைதான் இந்த எழுச்சியின் பின்னால் இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போது மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி, கர்நாடகா, தமிழ்நாடு, ஹரியாணா, உத்தர பிரதேசம், தெலங்கானா, மேற்கு வங்கம், குஜராத் ஆகிய 10 மாநிலங்களில் தலா ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர்.

இந்த தொற்று பரவலை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, நேற்றுமுன்தினம் டெல்லியில் அவசர ஆலோசனை நடத்தினார்.

இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் டாக்டர் பலராம் பார்கவா, தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குநர் சுஜீத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் நேற்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாவது:

நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தீவிர கண்காணிப்பு அவசியம். கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்களா என்பதைக் கண்காணிக்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் செய்ய வேண்டும்.

அதிக பாதிப்பு உள்ள மாவட்டங்களில் கவனம் செலுத்தி, தொற்று பரவுவதை மதிப்பிடுவதற்கும், சரியான நேரத்தில் கட்டுப்படுத்துவதற்கும் போதுமான பரிசோதனை மற்றும் கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும்.

முதியவர்கள், பள்ளி மாணவர் களுக்கு தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க வேண்டும். இதற்காக கரோனா தடுப்பூசி முகாம்களையும் அதிக அளவில் நடத்த வேண்டும்.

கடந்த 2 வாரங்களாக நாட்டின் தொற்று பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. தமிழ்நாடு, டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் தினசரி கரோனா பாதிப்பு ஆயிரத்தைக் கடந்துள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும், சுவாச பிரச்சினை இருக்கும் கரோனா நோயாளிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். முதல் 2 தவணைகளுடன், தேவைப்படும் மாவட்டங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்த வேண்டும். கரோனா தொற்று அதிகம் பரவும் மாவட்டங்களில் கரோனா ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு மன்சுக் மாண்டவியா கூறினார்.

17,336 பேருக்கு கரோனா

இந்தியாவில் நேற்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 17,336 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது கடந்த 100 நாட்களில் மிக அதிக அளவான பாதிப்பாகும். இதையும் சேர்த்து இதுவரை இந்தியாவில் 4,33,62,294 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் கரோனாவால் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதையும் சேர்த்து உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,24,954 ஆக அதிகரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x