Published : 27 May 2016 11:27 AM
Last Updated : 27 May 2016 11:27 AM
மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. இந்நிலையில், தமிழகம், மகா ராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் சார்பில் ‘கேவியட்’ மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் மாணவர் களைச் சேர்க்க தேசிய அளவில் ஒரே நுழைவுத்தேர்வு (என்இஇடி) நடத்தி தகுதி அடிப்படையில் மட்டுமே மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகம், ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங் களில் வெவ்வேறு பாடத்திட்டங்கள் இருப்பதால், மாநிலங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மாநில அரசுகள் சார்பில் மத்திய அரசிடம் முறையிடப்பட்டது. இதை யடுத்து, தேசிய நுழைவுத்தேர்வில் இருந்து இந்த ஆண்டு மட்டும் குறிப்பிட்ட மாநிலங்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளித்து மத்திய அரசு அவசர சட்டம் இயற்றியது. இச்சட்டத்துக்கு கடந்த 24-ம் தேதி குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததையடுத்து, மத்திய அரசிதழிலும் பிரசுரிக்கப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. நுழைவுத் தேர்வின் இரண்டாம்கட்ட தேர்வு ஜூலை 24-ம் தேதி நடைபெற உள்ளது.
சட்ட விரோதம்
இந்நிலையில், மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு இடைக்கால தடை கோரி ஆனந்த் ராய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இம்மனு உச்ச நீதிமன்ற விடுமுறைக் கால நீதிபதிகள் பி.சி.பந்த் மற்றும் டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் விவேக் தங்க்கா ஆஜராகி வாதிட்டார். இவர் வியாபம் ஊழலை வெளியில் கொண்டு வர காரணமானவர்களில் முக்கியமானவர் என்று கூறப்படு கிறது. ‘உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. இது சட்ட விரோதம். எனவே, அவசர சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்’ என்று அவர் வாதிட்டார். சங்கல்ப் அறக்கட்டளை சார்பிலும் அவசர சட்டத்துக்கு எதிராக வாதிடப்பட்டது.
மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி, ‘அவசர சட்டத்தின்மூலம், விரும்பும் மாநிலங்களுக்கு இந்த கல்வி ஆண்டு மட்டுமே விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தனது அதிகார எல்லைக்கு உட்பட்டே இந்த அவசர சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதில் தவறு ஏதும் இல்லை. இம்மனுவை அவசரமாக விசாரிக்கும் அளவுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. எனவே, மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று வாதிட்டார்.
மேலும் குழப்ப வேண்டாம்
இருதரப்பையும் கேட்ட நீதிபதிகள், ‘இந்த மனு மீது உத்தரவு பிறப்பித்து மேலும் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம். மாணவர்கள் தெளிவான மனநிலையுடன் முதலில் இரண்டாம்கட்ட தேர்வை எழுதட்டும். அவசர சட்டத்தின் சட்ட அங்கீகாரம் குறித்து கோடை விடுமுறைக்குப் பின் கூடும் நீதிமன்றத்தில் முடிவெடுக்கட்டும்’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். உச்ச நீதிமன்றம் கடந்த மே 16-ம் தேதி முதல் ஜூன் 28-ம் தேதி வரை கோடை விடுமுறையில் உள்ளது. ஜூன் 29-ம் தேதி உச்ச நீதிமன்றம் வழக்கம்போல் செயல்படத் தொடங் கும் என்பது குறிப்பிடத்தக்கது.
‘கேவியட்’ மனு தாக்கல்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டம் மூலம் தமிழகம், கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானா, குஜராத், மகாராஷ்டிரா, பஞ்சாப், கோவா ஆகியவற்றுக்கு நுழைவுத் தேர்வில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத் தில் நுழைவுத்தேர்வு இல்லாமல் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படை யில் தரவரிசைப் பட்டியல் தயாரிக் கப்பட்டு, அதன்மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
சில மாநிலங்களில் மாநில அளவிலான நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு அதன்மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இந்நிலையில், அவசர சட்டத்துக்கு எதிரான மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கலாகி உள்ளதால், தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் சார்பில் ‘கேவியட்’ மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எங்களது கருத்தைக் கேட்காமல் அவசர சட்டத்துக்கு தடை விதிக்க கூடாது என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT