Published : 24 Jun 2022 09:12 PM
Last Updated : 24 Jun 2022 09:12 PM
வயநாடு: இந்திய மாணவர் கூட்டமைப்பினரால் வயநாடில் அமைந்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் அலுவலகம் சூறையாடப்பட்டுள்ளது.
கடந்த 2019 தேர்தலில் ராகுல் காந்தி, வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில், தொகுதி மக்களின் நலனில் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்திக்கு அக்கறை இல்லை என சொல்லி அவருக்கு எதிராக இன்று பேரணி கல்பேட்டா நகரில் நடத்தியுள்ளனர் இந்திய மாணவர் கூட்டமைப்பினர்.
அண்மையில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளை ஒட்டியுள்ள ஒரு கிலோமீட்டர் தொலைவிலான பகுதிகள் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக மாற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. அதற்கு வனப்பகுதிகளை அதிகம் உள்ளடக்கி உள்ள வயநாடு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாகத்தான் இந்திய மாணவர் கூட்டமைப்பினர் இந்தப் பேரணியை நடத்தியாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பேரணி இன்று ராகுல் காந்தியின் அலுவலகம் அருகே வந்தபோது வன்முறை வெடித்துள்ளது. தொடர்ந்து இந்திய மாணவர் கூட்டமைப்பின் கொடியுடன் அந்த அலுவலகத்திற்குள் நுழைந்த சிலர் அலுவலகத்தை சூறையாடி உள்ளனர்.
இதை அறிந்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளனர். கேரளா முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் இந்தச் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நாச வேலையை செய்த நபர்களை கைது செய்ய வேண்டும் என சொல்லி உள்ளூர் எம்.எல்.ஏ சித்திக், மாவட்ட தலைமை போலீஸ் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார்.
இந்தத் தாக்குதலுக்கு கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். "அரசியல் வெளிப்பாடு வன்முறையாக சிதைந்து விடக்கூடாது" என அவர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் எம்.பி-யுமான சசி தரூர் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT