Published : 23 Jun 2022 06:02 AM
Last Updated : 23 Jun 2022 06:02 AM

எந்த பிரிவினருக்கும் எதிராக இல்லை; சட்டவிரோத கட்டிடங்களே இடிக்கப்படுகின்றன - உச்ச நீதிமன்றத்தில் உ.பி. அரசு பதில்

புதுடெல்லி: சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடங்களை வளர்ச்சி ஆணைய அதிகாரிகள் சட்டப்படியும், பாரபட்சமின்றியும் இடித்து வருகின்றனர் என உச்ச நீதிமன்றத்தில் உத்தர பிரதேச அரசு பதில் அளித்துள்ளது.

முகமது நபிகள் பற்றி பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோர் தெரிவித்த சர்ச்சை கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டம் நடந்தது. உத்தர பிரதேசத்தில் போராட்டத்தை தூண்டிய தலைவர்கள் ஆக்கிரமிப்பு இடங்களில் கட்டிய வீடுகள் மற்றும் கட்டிடங்களை புல்டோசர் மூலம் அரசு அதிகாரிகள் இடித்துவருவதாகவும், இதை உச்ச நீதிமன்றம் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் ஜமாத் உலாமா இ-ஹிந்த் என்ற அமைப்பு வழக்கு தொடர்ந்தது.

இந்த விசாரணையின்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள் ஏ.எஸ்.போபன்னா, விக்ரம் நாத் ஆகியோர், ‘‘கட்டிட இடிப்பு நடவடிக்கை சட்டத்துக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்க கூடாது’’ என்று கூறினர். மேலும் இந்த நடவடிக்கை தொடர்பாக உ.பி.அரசும், பிரயாக்ராஜ், கான்பூர் மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டனர்.

அதன்படி உத்தரபிரதேச அரசு, உள்துறை சிறப்பு செயலாளர் மூலம் தாக்கல் செய்த 63 பக்க பதில் மனுவில் கூறியிருப்பதாவது:

உத்தர பிரதேச அரசு எந்த அசாதாரண நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. சட்டவிரோத கட்டிடங்களை வளர்ச்சி ஆணைய அதிகாரிகள் இடிப்பது வழக்கமான நடைமுறைதான். இது பழிவாங்கும் நடவடிக்கை என ஜமாத் உலாமா ஹிந்த் அமைப்பு கூறுவது முற்றிலும் பொய்யானது.

நகர்ப்புற திட்ட மற்றும் மேம்பாட்டு சட்டப்படி ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையை, ஒரு குறிப்பிட்ட மதப்பிரிவினருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தண்டனை நடவடிக்கை என ஜமாத் உலாமா கூறுவதை மறுக்கிறோம்.

வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது குண்டர் சட்டம், பொதுச்சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்துவதை தடுப்பது, குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய தண்டனைச்சட்டம் போன்றவற்றின்கீழ் ஏற்கெனவே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கான்பூரில் இடிக்கப்பட்ட கட்டிடங்கள் சட்டவிரோதமாக கட்டப்பட்டவை. இந்த நடவடிக்கை, கலவரம் நடைபெறுவதற்கு முன்பாகவே தொடங்கிவிட்டது. இரண்டு வழக்குகளில் ஒன்றின் நடவடிக்கை கடந்த 2020 ஆகஸ்ட் மாதமும், மற்றொன்றின் நடவடிக்கை கடந்த பிப்ரவரி மாதமும் தொடங்கியது. இதில் அதன் உரிமையாளர்கள் சட்டவிரோதமாக கட்டிடங்கள் கட்டியதை ஒப்புக் கொண்டுள்ளனர்.

பிரயாக்ராஜில் ஜாவேத் முகமது என்பவர் அனுமதியின்றி கட்டிய வீட்டை இடிப்பதற்கான நடவடிக்கை கலவரத்துக்கு முன்பே தொடங்கப்பட்டது. கட்டிட இடிப்பால் பாதிக்கப்பட்ட யாரும் உச்ச நீதிமன்றத்தை அணுகவில்லை. சட்டவிரோ கட்டிடங்கள் இடிப்பு என்பது வழக்கமாக நடைபெறும் நடவடிக்கை. இவ்வாறு உத்தர பிரதேச அரசு பதில் அளித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x