Published : 23 Jun 2022 03:06 AM
Last Updated : 23 Jun 2022 03:06 AM
மும்பை: மகாராஷ்டிராவில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்ரே தனது குடும்பத்துடன் முதல்வரின் அதிகாரபூர்வ அரசு இல்லத்தை காலி செய்துவிட்டு தனது சொந்த வீடான 'மாடோஸ்ரீ'க்கு திரும்பியுள்ளார்.
சிவசேனாவின் சட்டப்பேரவை கட்சித் தலைவரும் மாநில அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே, சமீபகாலமாக கட்சியில் தனக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று அதிருப்தியில் இருந்துவந்தார். கடந்த திங்கட்கிழமை நடந்த சட்ட மேலவைத் தேர்தலில் சிவசேனா கட்சியின் 12 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதேபோல 3 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் பாஜக வேட்பாளருக்கு வாக்களித்தனர். இதனால், பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றார். காங்கிரஸ் ஆதரவு பெற்ற தலித் தலைவரான சந்திரகாந்த் ஹன்டோர் தோல்வியடைந்தார். 12 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்தது சிவசேனாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனிடையே, அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவாளர்களான சிவசேனாவின் 21 அதிருப்தி எம்எல்ஏக்களுடன் திங்கட்கிழமை இரவு குஜராத் மாநிலம் சூரத் சென்றவர், இப்போது அசாமில் முகாமிட்டுள்ளார். இந்த 22 பேரைத் தவிர, மேலும் சில எம்எல்ஏக்களும் சிவசேனாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், மகாராஷ்டிர அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தவ் தாக்கரே ஆட்சிக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
பாஜகவுடன் சிவசேனா கூட்டணி அமைக்க வேண்டும் என்றும் ஏக்நாத் ஷிண்டே நிபந்தனை விதித்துள்ளதால் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் முதல்வர் உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின் தொண்டர்களிடம் பேசிய உத்தவ் தாக்ரே, "ஏக்நாத் ஷிண்டேவுடன் சென்ற எம்எல்ஏக்கள் வலுக்கட்டாயமாக அழைத்து செல்லப்பட்டதாக தகவல் வருகிறது. அதிருப்தியாளர்களில் யாராவது நான் முதல்வராக தொடர்வதில் விருப்பமில்லை என்று கூறினால் நான் இப்போதே பதவியை ராஜினாமா செய்துவிடத் தயார். சிவசேனாவையும் இந்துத்துவாவையும் ஒருபோதும் பிரிக்க முடியாது. முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததற்கான கடிதத்தை தயார் நிலையில் வைத்துள்ளேன். நான் ராஜினாமா செய்தால், எனக்குப் பிறகு சிவசேனாவை சேர்ந்த ஒருவர் முதல்வராக வந்தால் மகிழ்ச்சி அடைவேன்" என்று தெரிவித்தார்.
பின்னர் இரவு நேரத்தில் உத்தவ் தாக்கரே தனது குடும்பத்துடன் மகாராஷ்டிர முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமான 'வெர்ஷா'விலிருந்து வெளியேறி தனது சொந்த பங்களாவான 'மாடோஸ்ரீ'க்கு சென்றார். வெர்ஷா' இல்லத்திலிருந்த உத்தவ் தாக்கரே குடும்பத்துக்குச் சொந்தமான அனைத்து உடைமைகளும் காலி செய்யப்பட்டு 'மாடோஸ்ரீ' இல்லத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது. செல்லும்வழியில் சிவசேனா தொண்டர்கள் முழக்கம் எழுப்பிக்கொண்டே சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT