Published : 22 Jun 2022 06:13 AM
Last Updated : 22 Jun 2022 06:13 AM
புதுடெல்லி: அக்னி வீரர்களுக்கு எளிதில் வேலை கிடைக்கும் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: போர் சூழல் என்பது முழுமையாக மாறிவிட்டது. நேருக்கு நேர் போரிடும் சூழல் மாறி கண்ணுக்கு எட்டாத தொலைவில் இருந்து போர் நடைபெறுகிறது. கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் போர் நடைபெறுகிறது. இன்றைய போரில் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. காலத்துக்கு ஏற்ப இந்தியாவும் மாற வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டில் நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். அவர் பொறுப்பேற்ற பிறகு இந்தியாவை வலிமையாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சுமார் 25 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த முப்படைகளின் தளபதி பதவியை உருவாக்கினார்.
முப்படைகளிலும் அதிநவீன ஆயுதங்கள் பயன்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன. ராணுவ வீரர்களுக்கு அதிநவீன ஏ.கே.-203 ரக துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன. சர்வதேச நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம். ஆனால் நமது பாதுகாப்புப் படைகள் இளமையானதாக இல்லை. முப்படைகளிலும் இளைஞர்கள் நிறைந்திருக்கவே அக்னி பாதை திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இப்போதைய நடைமுறையில் ஒரு வீரர் 15 ஆண்டுகள் வரை படையில் பணியாற்றுகிறார். அவர் தன்னுடைய 35-வது வயதில் ஓய்வு பெறுவார். ஓய்வூதியத்தில் மட்டுமே அவர் குடும்பத்தை நடத்த முடியாது. புதிய வேலைவாய்ப்பை தேட வேண்டும். 35 வயதில் வேலைவாய்ப்பு கிடைப்பது கடினம்.
அக்னி பாதை திட்டத்தில் ஒரு வீரர், 4 ஆண்டுகள் பணியாற்றுவார். தன்னுடைய 25-வது வயதில் அவர் பணியை நிறைவு செய்வார். அந்த வயதில் அடுத்த வேலைவாய்ப்பை தேடுவது எளிது. அரசு, தனியார் துறைகள் அக்னி வீரர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க முன்வந்துள்ளன. அக்னி வீரர் ஓய்வு பெறும்போது அவருக்கு சுமார் ரூ.11 லட்சம் கிடைக்கிறது. இந்த தொகையை முதலீடு செய்து அவர் தொழில் தொடங்கலாம். உயர் கல்வியை தொடரலாம். சாதாரண இளைஞர்களைவிட அக்னி வீரர்களுக்கு எளிதில் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
அக்னி பாதை திட்டத்தில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்கள் அவரவர் சொந்த ஊருக்கு திரும்பி செல்வார்கள். ஒழுக்கம், கடமை, தேசப்பற்று நிறைந்த அவர்கள், நாட்டு மக்களுக்கு முன்னுதாரணமாக வாழ்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
அக்னி வீரர்களுக்கு அரசு பணி
பிவானியில் நேற்று நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் பங்கேற்றார். பின்னர் அவர் பேசியதாவது:
அக்னி பாதை திட்டத்தின் கீழ் முப்படையில் சேரும் அனைத்து அக்னி வீரர்களுக்கும் அரசு வேலை வழங்குவது உறுதி செய்யப்படும். மாநிலத்தின் சி பிரிவு பணி மற்றும் காவல் துறையில் அக்னி வீரர்கள் சேர்த்து கொள்ளப்படுவார்கள். அவர்களின் வளமான எதிர்காலம் பாதிக்கப்படாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கேவியட் மனு தாக்கல் செய்தது மத்திய அரசு
அக்னி பாதை திட்டம் சட்டவிரோதம் எனக் கூறி வழக்கறிஞர் எம்.எல்.சர்மா உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். இதேபோல் வழக்கறிஞர் ஹர்ஷ் அஜய் சிங் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், அக்னி பாதை திட்டத்தை மறுபரிசீலனை செய்யக்கோரி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார்.
அக்னி பாதை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டங்கள் குறித்தும், அதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும் எனவும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை அவசர மனுவாக தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்ற விடுமுறை கால அமர்வில் உள்ள நீதிபதிகள் சி.டி ரவிக்குமார் மற்றும் சுதன்சு துலியா ஆகியோர் மனுதாரரிடம் நேற்று கூறினார்.
இந்நிலையில் அக்னி திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில், உத்தரவு பிறப்பிக்கும் முன்பாக, தங்கள் தரப்பு விளக்கத்தையும் கேட்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு நேற்று கேவியட் மனு தாக்கல் செய்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT